/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்காணிப்பு இல்லாததால் கொள்ளை போகும் ஏரி மண்
/
கண்காணிப்பு இல்லாததால் கொள்ளை போகும் ஏரி மண்
ADDED : அக் 07, 2024 11:01 PM
விவசாய நிலங்களின் மண் வளத்தை பாதுகாக்க தமிழக அரசு ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதன் படி ஒரு விவசாயி, அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து தாசில்தார் அலுவலகத்தில் அனுமதி பெற்று ஒரு ஏக்கருக்கு 30 கனமீட்டர் என்ற கணக்கில் மண் எடுக்க முடியும். இது டிராக்டர் டிப்பரில் எடுக்கும் போது 10 டிப்பரில் முடிந்து விடும். இந்த அனுமதியை மிக குறைந்த அளவிலேயே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் டிராக்டர்களிலும், டாரஸ் லாரிகளும் மணல், ஜல்லி, மண் விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் விவசாயிகளின் பெயரில் போலியாக அனுமதி பெற்று மண் எடுக்கின்றனர். இவர்கள் விவசாயிகளிடம் சிட்டா, பட்டாவை வாங்கி கனிசமான தொகையை கொடுத்து அனுமதி பெற்று விடுகின்றனர். இவர்கள் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் யாரேனும் திடீர் ஆய்வுக்கு வருகின்றனரா என்பதை தெரிவிக்க ஜீப் டிரைவர்களுக்கும் ஒவ்வொரு அனுமதியின் போதும் குறிப்பிட்ட தொகையை கொடுக்கின்றனர்.
இந்த அனுமதியை பெற்று போலி விவசாயிகள் மண் எடுப்பதை வருவாய்த்துறையினரோ, நீர்பாசன பிரிவு அதிகாரிகளோ கண்காணித்து எந்த அளவிற்கு மண் எடுக்கின்றனர் என்பதை கணக்கிடுவதில்லை. இதனால் மண் எடுப்பவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி மண் எடுக்கின்றனர்.
இதை தெரிந்து கொண்டு மிரட்டும் போலி அரசியல் வாதிகள், போலி சமூக ஆர்வலர்களுக்கு தனியாக ஒரு தொகையை கொடுத்து விட்டு இரவு நேரத்தில் ஜே.சி.பி., இயந்திரத்தை கொண்டு டாரஸ் லாரிகளில் கணக்கில்லாமல் மண் எடுக்கின்றனர்.
நேர்மையாக பணி செய்யும் வி.ஏ.ஓ.,க்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டுகின்றனர். தொடர்ந்து ஒத்து வராதவர்களை தங்களுக்கு உள்ள செல்வாக்கை கொண்டு வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் செய்கின்றனர்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் மண் வளம் கொள்ளை போய் கொண்டுள்ளது. இதை கண்காணிக்க தவறினால் நாளடைவில் ஏரிகள் அதன் தன்மையை இழந்து குட்டைகளாக மாறிவிடும்.