/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேவனுார் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை
/
தேவனுார் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை
ADDED : மார் 18, 2025 10:44 PM

விழுப்புரம் : ஆதிச்சனுாரில் அகழாய்வு தொடங்கும்போது, அருகே உள்ள தேவனுார் பகுதி நினைவு சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு, பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
ஆதிச்சனுாரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்புக்குரியதாகும். ஆதிச்சனுாருக்கு அருகே தேவனுாரில், தொல் மாந்தர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக இங்குள்ள நெடுங்கல் அல்லது குத்துக்கல் குறிப்பிடத்தக்கது. 15 அடி உயரமும் 8 அடி அகலமும் 6 அங்குல கனமும் கொண்டதாக இருக்கிறது. எடை பல டன்கள் ஆகும். மக்கள் இதனை 'கச்சேரிக்கல்' என்று அழைக்கின்றனர்.
இது, இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவு கல் ஆகும். நடுகல், வழிபாட்டின் தொடக்க புள்ளியாகவும் இந்நெடுங்கல் கருதப்படுகிறது. இதனைச்சுற்றிலும் கல் வட்டங்களும் காணப்படுகின்றன.
புயல், காற்று, மழை, வெயில் போன்ற இயற்கை பேரிடர்களைத் தாண்டி பல்லாண்டு காலம் நின்றிருக்கும் இந்த நினைவு கல், தற்போது அழிவை சந்தித்து வருகிறது.
இதே போல், அங்கு மிகப்பெரிய கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட கல் திட்டையும் காணப்படுகிறது. இதனை 'வாலியர்' எனும் 'குள்ள மனிதர்கள்' வாழ்ந்த வீடாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இதுவும் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவு கல் ஆகும்.
இந்த நினைவு சின்னங்கள், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. 147 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஆங்கிலேயரது ஆவணங்களில் 'தேவனுார் வரலாற்று தடயங்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை உலகநாடுகளில் உள்ள தொல் மாந்தர் நினைவு சின்னங்களுடன் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றை பாதுகாக்க வேண்டும்.
ஆதிச்சனுாரில் அகழாய்வு தொடங்கும்போது, தேவனுார் நினைவு சின்னங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.