ADDED : மார் 05, 2024 05:24 AM

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தமல்லி தெருவில், 7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 120 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி மெயின் ரோட்டில், பாதாள சாக்கடை பணியின்போது, சேதமடைந்த சாலையினை சீரமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.
பின், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்காவில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், விளையாட்டு மையம் மற்றும் சிறுவர்களுக்கான பூங்காவை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் ரமேஷ் உடனிருந்தனர்.

