/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் பரிதவிப்பு: மின் விளக்குகள் இன்றி கும்மிருட்டில் திக் திக் நடைபயணம்
/
மேல்மலையனுாரில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் பரிதவிப்பு: மின் விளக்குகள் இன்றி கும்மிருட்டில் திக் திக் நடைபயணம்
மேல்மலையனுாரில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் பரிதவிப்பு: மின் விளக்குகள் இன்றி கும்மிருட்டில் திக் திக் நடைபயணம்
மேல்மலையனுாரில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் பரிதவிப்பு: மின் விளக்குகள் இன்றி கும்மிருட்டில் திக் திக் நடைபயணம்
ADDED : ஜூன் 01, 2025 11:20 PM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யாமல் இருப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பக்தர்கள் அதிகம் வரும் ஆன்மிக ஸ்தலமாக மேல்மலையனுார் உள்ளது. இங்கு நடந்து வரும் மாசி தேர் திருவிழா, அமாவாசை ஊஞ்சல் உற்சவம், ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அமாவாசையன்று இரவு மேல்மலையனுாரில் தங்கி மறுநாள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் மேல்மலையனுாரில் பக்தர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. விழாக்காலங்களில் அரசு இயக்கும் சிறப்பு பஸ்கள் அவலுார்பேட்டை ரோட்டிலும், வளத்தி ரோட்டிலும் தற்காலிக பஸ் நிலையத்திலும் நிறுத்துகின்றனர். இந்த பஸ் நிலையங்கள், கோவிலில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது.
தற்காலிக பஸ் நிலையம் வந்து இறங்கும் பக்தர்களுக்கு, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. விழா காலங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்காலிக பஸ் நிறுத்திற்கு 4 கி.மீ., முன்னதாக வளத்தியிலே பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், பக்தர்கள் ஒரு மின் விளக்குகள் கூட இல்லாத கும்மிருட்டு சாலையில், 6 கி.மீ., துாரம் குழந்தைகளுடன் நடந்து செல்கின்றனர்.
போலீஸ் பூத் அருகில் மட்டும் மின் விளக்கு எரிகிறது. மேல்மலையனுாருக்கு வருவதற்கு அவலுார்பேட்டை, கொடுக்கன்குப்பம், தொரப்பாடி, வளத்தி, சிறுதலைப்பூண்டி என ஐந்து சாலைகள் உள்ளன. விழாக்காலங்களில் இச்சாலை வழியாக வரும் பஸ், வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் 1. கி.மீ., முன்னதாக நிறுத்தப்படுகிறது. இதனால் ஊரை சுற்றிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
இத்தகைய பக்தர்களுக்கு ஆங்காங்கே கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. கோவில் அருகில் மட்டும் 6 இடங்களில் கழிப்பிடங்கள் உள்ளன. அவையும் இலவசம் கிடையாது. ரூ. 10 கட்டணம் வசூலிக்கின்றனர். போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் இரவு நேரத்தில் ஏரி, புதர் மண்டிய மறைவிடங்களுக்கு சென்று ஊரை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிவிடுகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக விசாலமான தங்கும் விடுதிகள் கிடையாது. அமாவாசை தினத்தன்று மழை பெய்தால், பக்தர்கள் ஒதுங்க கூட இடம் இன்றி குழந்தைகளுடன் நனைகின்றனர். சிறிய ஊரான மேல்மலையனுாருக்குள் ஒரே இரவில் 2 லட்சம் பக்தர்கள் வந்து செல்வதால், மறுநாள் ஊர் முழுவதும் பல டன் குப்பைகள் குவிந்து விடுகிறது.
இதனை சேகரித்து, ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் ஏரி தண்ணீரில் கலந்து நிலத்தடி நீர் மாசு அடைந்து வருகிறது. பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் இல்லை. ஹிந்து சமய அறிநிலையத்துறை கோவில் வளாகம் தவிர வேறு இடங்களில் எந்த வசதியும் செய்ய முன்வரவில்லை. மற்ற துறைகளும் மேல்மலையனுாரை கண்டுகொள்வது கிடையாது.
கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டும் இன்றி பல்வேறு இனங்கள் மூலம் பல கோடி வருவாய் வருகிறது. ஆனால் பக்தர்கள் அடிப்படை வசதிக்கு சொற்ப அளவிலான நிதி ஒதுக்குகின்றனர். இங்கு முறையான அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் சுகாதார சீர் கேட்டினால் உள்ளூர் மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஹிந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, கோவில் நிர்வாகம் விரிவான ஆய்வு நடத்தி அடிப்படை வசதிகள் செய்ய பெரிய அளவிலான திட்டங்களை உருவாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.