ADDED : அக் 26, 2026 04:47 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், உயரம் வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் பெருந்துட்ட வளாகம் கேட் பகுதியில் இன்று (அக்.,26) காலை 11:00 மணிக்கு திரண்ட மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், உயரம் வளர்ச்சி தடை பட்ட மாற்றுத்திறனாளிகளை, கடும் ஊனம் உள்ளவர்களாக அறிவித்து, அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு இலவச வீடுகள் வழங்க வேண்டும். மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அரசு பஸ்களிலும், தாழ்வான படிக்கட்டுகள் அமைக்கவும், முழுவதும் இலவச பயணம் செய்யவும் சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர்.
