/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
/
புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
ADDED : அக் 03, 2025 11:36 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, புதிய கற்கால கை கோடாரி போன்ற கருவிகள் கண்டுடெடுக்கப்பட்டன.
சென்னை ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ஹரிஹரசுதன் ஆகியோர், வீடூரில் உள்ள வராக நதி மற்றும் தொண்டியாறு பகுதி, கம்மாளமேட்டில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கல் கோடாரி போன்ற கருவிகள் கண்டறியப்பட்டன.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
இங்கு, புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த கருவிகளை குழி தோண்டவும், உழவுத்தொழிலுக்கும் பயன்படுத்தியது தெரிகிறது. புதிய கற்கால மக்கள், முதன் முதலாக வேளாண்மை செய்ய, ஓர் இடத்தில் நிலையாக தங்க, மலைப்பகுதிகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் குடில்களை அமைத்தனர். மாமிசங்களுக்கு பதிலாக, தானியங்களை உணவாக சாப்பிட கற்றனர். அதனால் உணவு தானியங்களை விளைவிக் கவும், வீட்டு விலங்குகளை வளர்க்கவும் துவங்கினர்.
பழைய கற்காலத்திலிருந்து, புதிய கற்காலம் ஒரு அறிவியல், சமூக மாற்றத்தை கொண்டு வந்த காலமாக கருதப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இந்த புதிய கற்கால கருவிகள் கிடைக்கின்றன. இவைகள் வழவழப்பாகவும், மெருகேற்றப் பட்டவையாகவும் உள்ளன. மயிலாடும்பாறை, சிவகலை, பட்டரை பெரும்புதுார், வடக்குபட்டு, அத்திரம்பாக்கம், குடியம், இளந்தகரை, வலசை, செட்டிமேடு உள்ளிட்ட பல இடங்களில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.