/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்
/
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்
ADDED : நவ 15, 2024 05:10 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒரு நாள் புறநேயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்டத்திலும், அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று மாலை 6:00 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர்.
தொடர்ந்து, விழுப்புரத்தில் அரசு மருத்துவமனையில், நேற்று காலை 8:00 மணிக்கு டாக்டர் ஆனந்தன் தலைமையில், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை முன் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலும், செஞ்சி அரசு மருத்துவமனை முன் டாக்டர் ராஜலட்சுமி தலைமையிலும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அரசு மருத்துவர் சங்கம் சார்பில் தலைவர் சம்பத், செயலாளர் வினோத் தலைமையில் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கலந்துகொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவர் சங்க மாநில பொருளாளர் திருமாவளவன், மாவட்டத் தலைவர் தங்கராஜ், செயலர் சவுந்தர்ராஜன் தலைமையில் டாக்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
அரசு மருத்துவ கல்லுாரியில் அவசர சிகிச்சை பணியை மேற்கொண்டனர். டாக்டர்கள் போராட்டத்தால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று ஒருநாள் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.