ADDED : ஆக 30, 2026 06:52 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரதான சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் கந்தலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் திக்..திக் என பயணம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு வழியாக புதுச்சேரி, கடலுார், தஞ்சாவூர் பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இச்சாலையில் விழுப்புரம் ரெட்டியார் மின் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனம் எதிரில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை சீரமைக்க ஜல்லி கலவை கொட்டப்பட்டது. ஆனால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால், அப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே, பயணம் செய்து வருகின்றனர்.
பிரதான சாலையில் பள்ளத்தை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பிரதான சாலையில் கிடப்பில் உள்ள சீரமைப்பு பணியை துரிதப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
