/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் வேதனை
/
மின்மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் வேதனை
ADDED : மார் 18, 2025 10:45 PM
வானுார் : ஆரோவில் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார் காப்பர் ஒயர் திருடு போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆரோவில் பகுதியைச் சுற்றியுள்ள ராவுத்தன்குப்பம், இரும்பை, புள்ளிச்சப்பள்ளம், துருவை, ராயபுதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள், சீசனுக்கு தகுந்தபடி பயிர் செய்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் கிணற்றில் மோட்டார் பம்பு செட் அமைத்து, பயிர்களுக்கு நீர் இறைக்கப்படுகிறது. இந்த பம்ப் செட்டில் உள்ள மின் ஒயர்களை மர்ம ஆசாமிகள் வெட்டி திருடிச்செல்வது தொடர் கதையாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 7 மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த மின் ஒயர்கள் திருடப்பட்டு இருப்பதாக கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்துள்ளன.
இருப்பினும், மின் ஒயர் திருடர்களை கட்டுப்படுத்த முடியாத போலீசார், பழைய இரும்பு கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அவர்களிடம் ஒயர் திருடி வரும் நபர்களை அடையாளம் கண்டால் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதுவரை ஒரு மின்மோட்டார் ஒயர் திருடர்களை கூட போலீசார் பிடித்தது கிடையாது. பம்ப் செட்டில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் 5 முதல் 10 மீட்டர் காப்பர் ஒயர்களை திருடினால் கூட, ஒரு கிலோ காப்பர் ஒயர் 700 ரூபாய்க்கு மட்டுமே காயலாங்கடையில் வாங்குகின்றனர்.
ஆனால், ஒரு விவசாயி, மீண்டும் அந்த நிலத்தில் புதிய காப்பர் ஒயர் பொருத்துவதற்கு, எலக்ட்ரீஷியனை அழைத்து வர வேண்டி உள்ளது. அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களுக்கு கூலியே 3,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.