/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பாலப் பணி மந்தம்; விழுப்புரம் பைபாசில் வாகன ஓட்டிகள் அவதி
/
எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பாலப் பணி மந்தம்; விழுப்புரம் பைபாசில் வாகன ஓட்டிகள் அவதி
எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பாலப் பணி மந்தம்; விழுப்புரம் பைபாசில் வாகன ஓட்டிகள் அவதி
எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பாலப் பணி மந்தம்; விழுப்புரம் பைபாசில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 17, 2024 12:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் பைபாஸ் சாலையில், எல்லீஸ்சத்திரம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, மிகவும் மந்தமாக நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் பைபாசில், எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில், விழுப்புரம் - ஏனாதிமங்கலம் நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை சந்திப்பில் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து, ரூ.25 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது.
அதில், 12 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரத்தில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் உயர்மட்ட கான்கிரீட் பாலம் கட்டுமான பணி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையடுத்து, மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலையில் வாகனங்கள் செல்லத் துவங்கி உள்ளன.
ஆனால், பாலத்திற்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்த கதியில் நடந்து வருவதால், முக்கியமான தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாலத்தின் திருச்சி மார்க்கத்தில் 1 கி.மீ., தொலைவிற்கு, இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடக்கிறது. அதற்காக மண் கொட்டி நிரப்புவதற்கு, பிரம்மாண்ட சைடு ஸ்லாப்புகள் பொருத்தும் பணி 25 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.
பாலத்தின் சென்னை மார்க்க பகுதியில் 500 மீட்டர் தொலைவிற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். அந்த பகுதியிலும் தற்போது தான் சைடு சுவர்களுக்கான சிலாப்புகள் பொருத்தி மண் கொட்டி நிரப்பி வருகின்றனர்.
அப்பகுதியில், இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அதனருகே வாய்க்கால் பாலம் ஒன்றும் கட்டப்பட்டு, அதற்கான பக்கவாட்டு சுவர் கட்டாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேம்பாலம் பணி நடந்துவரும் இடதுபுறமும், வலது புறத்திலும் ஒரு வழி பாதையாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதில், சென்னை-திருச்சி மார்க்க வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. வார இறுதி நாள்கள் மற்றும் விழா காலங்களில் இங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வரும் பஸ்கள் அங்கு பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும்போது, அதன் மீது பிற வாகனங்கள் மோதி தொடர் விபத்துக்கள் நடக்கிறது.
எனவே, அங்கு போலீசாரை நியமித்து ஒழுங்குபடுத்தவும், இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.