ADDED : அக் 13, 2025 12:43 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே கடன் தகராறில் விவசாயி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 50; சிறு விவசாயி. இவர் கடந்த, 2015 ம் ஆண்டில் அதே ஊரை சேர்ந்த பாவாடை மகன்கள் சிவபாலன், தாமோதரன் ஆகிய இருவரிடம் கடன் பெற்றார். அவர் பணம் திருப்பி தராததால், குமாரிடம் அவருக்கு சொந்தமான வீட்டை இருவரும் கிரையம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தவறான முறையில் வீடு கிரையம் பெற்றுள்ளதாக கூறி குமார், விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் கடந்த, 10 ம் தேதியன்று ஆஜராக சிவபாலன் தரப்பினருக்கு சம்மன் வந்தது. அன்றைய தினம் கோர்ட் விசாரணைக்கு குமார் ஆஜராகக்கூடாது எனவும், அவரை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு செத்து போ எனவும் கூறி சிவபாலனும், தாமோதரனும் குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மிரட்டலின் காரணமாக நேற்று முன்தினம் மாலை குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சம்பவ இடத்திற்கு சென்று குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் குமார் மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு துாண்டியதாக கூறிய சிவபாலன், தாமோதரன் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்ய முற்பட்டனர். அவர்களிடம் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
இதையடுத்து குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பிற்பகல் 2:30 மணிக்கு பெற்றுச் சென்றனர்.