/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
/
குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 15, 2024 05:10 AM

திண்டிவனம்: விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என சப் கலெக்டர் அறிவறுத்தியும், பல அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினார்.
திண்டிவனம், ஜக்காம்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் சிவா, வேளாண் உதவி இயக்குனர் சரவணன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
திண்டிவனம் பகுதியில் நெல் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரவேண்டும். உளுந்து, பனிப்பயறு அதிகளவில் இருப்பு வைத்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். துார்ந்த விவசாய கிணறுகளை சீரமைத்து தரவேண்டும். ரோஷணை ஏரியை சீரமைத்து பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
ஆரம்ப சுகதார நிலையங்களில் பாம்பு கடிக்கு மருந்துகள் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும்.
விவசாயிகள் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என சப் கலெக்டர் அறிவறுத்தியும், பல அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை. குறிப்பாக வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வரவில்லை. கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் மழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வழங்க வேண்டிய இழப்பீடு வழங்கவில்லை. இதே போல் பயிர் காப்பீட்டு தொகையும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. நந்தன் கால்வாய் திட்டத்திற்கு தேவையான இடத்தை வனத்துறையினர் கொடுக்க மறுத்து வருகின்றனர். காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.
காட்டுப்பன்றி தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு மரக்காணம் அரசு மருத்துவமனையில் சான்றிதழ் வழங்காமல் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் பெற முடியவில்லை.
முருக்கேரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செஞ்சி அருகே உள்ள டோல்கேட்டில் விவசாயிகள் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
செஞ்சி, அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். கடந்த ஆண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டு கடந்தும் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.
அரசு அறிவித்துள்ள படி, கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் உள்ளது. கிராமங்களில் உள்ள வி.ஓ.ஓ., அலுவலகத்திற்கு பல வி.ஓ.ஓ.,க்கள் வருவதில்லை. மாலை 5:00 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் இருப்பதில்லை.
தொடர்ந்து பேசிய சப் கலெக்டர், விவசாயிகள் தெரிவித்த குறைகள் மற்றும் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.