/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள்... மகிழ்ச்சி; செஞ்சி பகுதி சாலையோர கடைகளில் விற்பனை ஜோர்
/
மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள்... மகிழ்ச்சி; செஞ்சி பகுதி சாலையோர கடைகளில் விற்பனை ஜோர்
மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள்... மகிழ்ச்சி; செஞ்சி பகுதி சாலையோர கடைகளில் விற்பனை ஜோர்
மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள்... மகிழ்ச்சி; செஞ்சி பகுதி சாலையோர கடைகளில் விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 24, 2024 05:51 AM

செஞ்சி : செஞ்சி பகுதியில் மாம்பழம் விளைச்சல் அதிகரித்ததுடன் நல்ல விலையுடன் விற்பனையும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் இரவு பகலாக விற்பனை ஜோராக நடக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும், தமிழகத்தில் விளையும் மாம்பழங்கள் மற்ற மாநிலங்களின் பழங்களை விட சுவை மிக்கவை. இதனால், தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் தமிழக மாம்பழங்களுக்கு தேவை அதிகமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன் வரை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டுமே மாம்பழங்கள் அதிகம் விளைந்தன.
தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாம்பழங்களை விளைவிக்கின்றனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்வொரு ஆண்டும் மாம்பழ சாகுபடியின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், மண் வளம் காரணமாக மாம்பழங்கள் சுவை மிக்கவையாக உள்ளன. புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி - திண்டிவனம் இடையே வடவானுார், ராஜம்புலியூர் பகுதியில் ஒன்றிரண்டு இடங்களில் மாந்தோப்புகளுக்கு வெளியே குத்தகைதாரர்கள் சீசன் நேரத்தில் மாம்பழ கடைகளை சிறிய அளவில் துவக்கினர்.
ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்காத செங்காயான மாம்பழங்கள் இங்கு கிடைத்ததால் ஏராளமானோர் விரும்பி வாங்கிச் சென்றனர். இந்த பழங்கள் சுவையாக இருந்ததால் ஆதரவு பெருகியது. ஒன்றிரண்டு என இருந்த கடைகள் தற்போது ஊரணி தாங்கலில் துவங்கி களையூர் கிராமம் வரை 25க்கும் மேற்பட்ட கடைகள் உருவாகியுள்ளன.
இங்கு விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் பெரும் பகுதி செஞ்சி பகுதி தோப்புகளில் விளைபவை. செஞ்சி பகுதி மா மரங்கள் பழங்காலத்து நாட்டு மரங்கள். குறுகிய காலத்தில் காய்க்கும் ஹைப்ரிட் மாமரங்கள் இல்லை. நல்ல தரத்துடன், இனிப்பு சுவையுடன் இருக்கும்.
தேன் போன்ற இனிப்பான மாமரம் இருந்ததால் செஞ்சி - திண்டிவனம் இடையே உள்ள ராஜாம்புலியூர் கிராம பஸ் நிறுத்த்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே தேன்மாமரம் என்ற பெயர் ஏற்பட்டது. இன்றளவும் அந்த பெயர் வழக்கத்தில் உள்ளது. அந்த அளவிற்கு இப்பகுதி மாம்பழங்கள் சுவை மிகுந்தவை.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை மாம்பழ விற்பனை குறைவாக இருந்ததால் தோப்பை குத்தகைக்கு எடுத்தவர்கள் மொத்தமாக மாம்பழங்களை வெளியூர் வியாபாரிகளுக்கும், மாம்பழ சாறு பிழியும் ஆலைகளுக்கும் விற்பனை செய்தனர். தற்போது கடைகளில் சில்லரை விற்பனை அமோகமாக நடப்பதால், இங்கு விளையும் பழங்கள் அங்கேயே விற்று தீர்ந்து விடுகின்றன.
கடந்த ஆண்டுகளில் இந்த வழியாக கார், பைக்குகளில் சென்ற போது மாம்பழம் வாங்கி சென்றவர்கள் மீண்டும் இந்த வழியாக செல்லும் போது மறக்காமல் மாம்பழம் வாங்கிச் செல்கின்றனர்.
இரவு, பகல் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் வருகையும் விற்பனையும் இரவு பகலாக நடந்து வருகிறது. ஏற்கனவே செஞ்சி பகுதியில் விளையும் பொன்னி நெல் ரகங்களும், செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளும் செஞ்சிக்கு பெருமை சேர்த்து வந்த நிலையில், மாம்பழங்களும் செஞ்சிக்கு பெருமை சேர்த்துள்ளன.
இந்த ஆண்டு மாம்பழ விளைச்சலும் அமோக இருப்பது போன்று வியாபாரமும் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.