/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
/
மேல்மலையனுார் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 25, 2025 07:06 AM

செஞ்சி: மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மேல்மலையனுார் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளாக மேல்மலையனுார், பனமலை ஏரிகள் உள்ளன. செஞ்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேல்மலையனுாருக்கு மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற துவங்கியது.
இதன் மொத்த கொள்ளளவு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி. இந்த ஏரியில் உபரி நீர் வெளியேற மூன்று இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒன்று சற்று உயரம் குறைவாகவும் மற்ற இரண்டும் உயரமானவையாக உள்ளன. உயரம் குறைவான பகுதியில் நேற்று தண்ணீர் வெளியேறியது. மற்ற இரண்டு இடங்களில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் போது தண்ணீர் வெளியேறும்.
மிகப்பெரிய ஏரி என்பதால் பல ஆண்டுகளாக நிரம்புவதில்லை. அதிக மழை பொழியும் ஆண்டில் மட்டும் ஏரி நிரம்பும்.
கடந்த ஆண்டு இந்த ஏரி நிரம்பியது. தற்போது இந்த ஆண்டும் ஏரி நிரம்பி உள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து விவசாயிகள் ஏரியில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். மேல்மலையனுார் ஏரி உபரி நீர் வெளியேறும் இடத்தில் சங்கராபரணி ஆறு துவங்குகிறது.
இதில் செஞ்சி பகுதியில் உருவாகும் வரகநதியும், பல்வேறு ஓடைகளும் இணைகின்றன. கனமழையால் சங்கராபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகரித்துள்ளது.
இதனால், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வீடூர் அணை கடந்த இரு தினங்களுக்கு முன், நிரம்பியது.
மேல்மலையனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால், அடுத்து வரும் நாட்களில் கனமழை பொழிந்தால் சங்கராபரணி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

