/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
/
விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
ADDED : டிச 11, 2025 05:40 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் கலிவரதன் தலைமையில் நேற்று காலை 11:59 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு விளைநிலத்தில் பெட்ரோல் எடுப்பதை தடுத்து போராடிய விவசாய சங்க தலைவர் பாண்டியன் உட்பட 20 பேர் மீது சட்டவிரோத வழக்குப் பதிவு செய்து, திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் போராட்டக்குழுவிற்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உரிமைக்காக போராடும் விவசாயிகளை மிரட்டுவதுபோல் உள்ளது.
அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை அரசின் கவனத்திற்கு கலெக்டர் கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.
இதையடுத்து, போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று 12:03 மணியளவில் மறியலை கைவிட்டு, இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் விழுப்புரம் - சென்னை சாலையில் 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

