/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
/
கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
ADDED : நவ 21, 2024 12:38 AM

திருவெண்ணெய்நலலுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மருத்துவமனை அமைக்க கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார், பெரியசெவலை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். இங்கு கால்நடை கிளை மருந்தகம் அமைக்கப் பட்டது.
இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை மருந்தகத்திற்கு ஓட்டி சென்றால், அங்கு டாக்டர்கள் இருப்பதில்லை. இச்சம்பவம் தொடர்கதையாக இருந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர டாக்டர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாததால், விவசாயிகள் நேற்று காலை 9:00 மணி அளவில் தங்களின் கால்நடைகளை பெரியசெவலை பகுதியில் கடலுார்-சித்துார் சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மறியலால் கடலுார் - சித்துார் பிரதான சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

