/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள்... தர்ணா; நெல்லுக்கான பணம் வழங்க கோரிக்கை
/
குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள்... தர்ணா; நெல்லுக்கான பணம் வழங்க கோரிக்கை
குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள்... தர்ணா; நெல்லுக்கான பணம் வழங்க கோரிக்கை
குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள்... தர்ணா; நெல்லுக்கான பணம் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 11:45 PM

விழுப்புரம்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல்லுக்கான பணம் வழங்கக்கோரி, குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டம் துவங்கியதும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அய்யனார் தலைமையில் விவசாயிகள் திடீரென எழுந்து கோஷம் எழுப்பினர்.
அதில், வானுார் தாலுகா நல்லாவூர், பரங்கினி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல்லுக்கான 70 லட்சம் ரூபாயை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ளது.
நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி அதிகாரிகள் முன் தலையில் முக்காடு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
விரைந்து வழங்குவதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க மறுக்கின்றனர். உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக தீர்வு காண சிறப்பு முகாம் நடத்த வேண்டும். நடப்பாண்டு 80 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூட்டைக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
மக்காச்சோளம் விதைகள் தனியார் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி சாகுபடி செய்துள்ளோம். வரும் காலங்களில் அரசு பண்ணைகளில் மக்காச்சோளம் விதை வழங்க வேண்டும். விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக பணம் வசூலிக்கின்றனர்.
இதனால், விக்கிரவாண்டி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு சென்று விளை பொருட்களை விற்பனை செய்கிறோம். குறுவை சம்பா பருவத்திற்கு விதைகள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து கடைகளில் அனுமதியில்லாத பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
மூங்கில் சாகுபடிக்கு 1.02 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இது தொடர்பான பட்டய பயிற்சி அளிக்க வேண்டும். ஏரிகளில் மீன்பிடிக்க தண்ணீர் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும்.
கரும்பு பயிரில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் நாங்கள் வைக்கும் எந்த கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.
பெஞ்சல் புயலில் சேதமடைந்த தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறு, மலட்டாறு கரைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், விவசாயிகளின் மனுக்களுக்கு 21 நாட்களில் அதிகாரிகள் பதில் மனுஅளிக்க வேண்டும். மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த 21 ஆயிரத்து 304 விவசாயிகளுக்கு 289 கோடியே 92 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது.
நடப்பாண்டில் 7 ஹேக்டரில் மானியத்தில் விவசாயிகள் மூங்கில் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டு 8 ஹேக்டர் சாகுபடி செய்யப்பட்டது' என்றார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், ஆர்.டி.ஓ., முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.