/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு
/
கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு
கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு
கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : பிப் 09, 2024 05:26 AM

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்காக மின் கோபுரங்கள் இடம் மாற்றி அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைப் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கெங்கராம்பாளையத்தில் துவங்கி, எம்.என்.குப்பம் வரை சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்துள்ளது.
இந்த சாலையில், கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், அரியூர் மற்றும் நவமால்காப்பேர் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டு, கெங்கராம்பாளையத்தை தவிர்த்த பிற பகுதிகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கெங்கராம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க உயர் மின்னழுத்த கோபுரங்கள் தடையாக இருப்பதால் பணிகள் முடிவு பெறவில்லை. இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, நகாய் அதிகாரிகள், உயர்மின்னழுத்த கோபுரங்கள் மாற்றி அமைக்க எம்.பாளையம் கிராமதில் 12 விவசாயிகளிடம் 240 சென்ட் நிலத்தை கையகப்படுத்தினர்.
இதற்கான இழப்பீடு வழங்காமல், நகாய் அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் கையகப்படுத்திய இடத்தில் இருந்த உளுந்து மற்றும் காராமணி பயிர்களை அழித்து உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க துவங்கினர். இழப்பீடு மற்றும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்காமல் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தை நடத்திய நகாய் அதிகாரிகள் இழப்பீடு விரைவில் வழங்குவதாக உறுதியளித்தனர்.
அதன்படி நிலத்திற்கான இழப்பீடு தொகையாக ஒரு சென்ட் ரூ.10 ஆயிரம் வீதம் 5 விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த மாத இறுதியில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஓரிரு வாரங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில், நிலத்திற்கும், சேதமான பயிர்களுக்குமான இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நிலம் வழங்கிய விவசாயிகள் கூறுகையில், எம்.பாளையம் கிராமத்தில் கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிக்கு உயர் மின்னழுத்த கோபுரங்களை மாற்றி அமைக்க எங்களது விவசாய நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தினர். புறவழிச்சாலை காரணமாக நிலத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால், அதிகாரிகள் ஒரு சென்ட் நிலத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளனர். இந்த தொகையும் இன்னும் பல விவசாயிகளுக்கு வரவில்லை. சந்தை மதிப்பிற்கு ஏற்ப இழப்பீட்டு தொகை வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

