ADDED : அக் 12, 2025 11:15 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், ஒடுவன்குப்பத்தை சேர்ந்தவர் பழனி, 75; விவசாயி. இவருக்கு சுசிலா, சரஸ்வதி ஆகிய இரு மனைவிகள். முதல் மனைவிக்கு சக்கரவர்த்தி, 50 என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு சந்திரசேகர், 40; சிவகுமார், சிவசங்கர் ஆகிய மூன்று மகன்கள்.
பழனிக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரை, சந்திரசேகர் பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில், சந்திரசேகர் தன் தந்தையை சரிவர கவனிக்காததால், அவரிடம் கொடுத்த, 5 ஏக்கரில் கொஞ்சம் நிலத்தை, பழனி திருப்பி கேட்டுள்ளார். சந்திரசேகர் தர மறுத்ததால், வருவாய் கோட்டாட்சியர், விழுப்புரம் சிவில் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் இன்று, சந்திரசேகரை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், நேற்று காலை, 6:45 மணிக்கு, ஒடுவன்குப்பம் ஏரிக்கரையில் நின்றிருந்த பழனி மீது, டிராக்டரை ஏற்றினார். இதில், உடல் நசுங்கி பழனி உயிரிழந்தார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்திரசேகரை கைது செய்தனர்.
மேலும், கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக சந்திரசேகர் மனைவி அன்பரசி, 38, உறவினர்கள் ஏழுமலை, 50, நெடுஞ்செழியன், 25, ஜெயக்குமார், 35, ஆகியோரை தேடுகின்றனர்.