/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விழுப்புரத்தில் விற்க முயன்ற கும்பல் சிக்கியது வனத்துறையினர் தீவிர விசாரணை

ADDED : நவ 15, 2024 05:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை விற்க முயன்ற சம்பவத்தில் 12 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜில், யானை தந்தத்தால் செய்த பொம்மைகளை விற்பனை செய்ய ஒரு கும்பல் வந்துள்ளதாக, தமிழ்நாடு வனம் மற்றும் சென்னை மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு தகவல் கிடைத்தது.
அங்கிருந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார் உட்பட வனக்காப்பாளர்கள் கொண்ட குழு, அந்த லாட்ஜிக்கு சென்றனர்.
லாட்ஜ் முன் நின்ற 'வோக்ஸ்வேகன்' காரில், சாக்கு மூட்டைகளோடு 5 பேர் இருந்தனர். சந்தேகத்தின்பேரில் சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், 4 யானை பொம்மைகள் இருந்தன.
அவற்றை ஆராய்ந்ததில், அந்த பொம்மைகள் யானை தந்தத்தில் தயாரிக்கப்பட்டதும், தஞ்சாவூர் பகுதியில் தயார் செய்த பழமையான பொம்மைகள் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில், லாட்ஜில் இருந்த ஒரு பெண் உட்பட 7 பேர் உட்பட12 பேரையும், விழுப்புரம் வனச்சரக அலுவலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் 12 பேரும் தஞ்சாவூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் காரில் வந்த 5 பேர், திருச்சியில் இருந்து யானை பொம்மைகளை கடத்தி வந்துள்ளனர். விற்பனை செய்வதற்காக வரவழைக்கப்பட்ட 7 பேரும் 3 பைக்குகளில் விழுப்புரம் வந்து லாட்ஜில் தங்கியுள்ளனர் என தெரிந்தது.
அதையடுத்து, நான்கு யானை பொம்மைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 3 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
விழுப்புரம் தாசில்தார் கனிமொழி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த யானை பொம்மைகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.