/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைபாசில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்
/
பைபாசில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்
ADDED : ஜூலை 15, 2025 06:17 AM
விழுப்புரம் புறவழிச்சாலையில் மொபைல் போன் பறிக்கும் கும்பலின் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக திருச்சி மற்றும் சென்னை, நாகப்பட்டினம் மார்க்கங்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் செல்பவர்களை வழிமறித்து மொபைல் போன், பணத்தை பறிக்கும் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
புறவழிச்சாலையில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை இந்த கும்பல் குறிவைத்து பின்னால் பைக்கில் தொடர்கின்றனர். ஆள் அரவமற்ற இடத்தில் பைக்கை நிறுத்தச் செய்து, மிரட்டி மொபைல் போன் மற்றும் பணத்தை அபகரிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் இந்த கும்பல் வாகன ஓட்டி ஒருவரிடம் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தடுக்க முயன்று வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதனால், விழுப்புரம் புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தனியாக செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.
எனவே, விழுப்புரம் புறவழிச்சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மொபைல் போன், பணம் வழிப்பறி செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியிலும் அட்டகாசம்
கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலை பெரும்பாலான இடங்கள் வயல்வெளியாக இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
அவ்வழியாக இரவு நேரங்களில் செல்வோரை நோட்டமிடும் மர்ம நபர்கள் சிலர் பைக்கில் பின்தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். கூலி வேலை மற்றும் பணிக்கு சென்று திரும்பும் பெண்களிடமும் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில நாட்களுக்கு மண்மலை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பைக்கில் சென்றபோது அவர்களை வழிமறித்து தகாத செயலில் ஈடுபட முயன்றனர். உடன் அவர்கள் வழியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்து, தங்களது ஊரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு கொண்டு வரவழைத்து சென்றுள்ளனர்.
இரவு நேரங்களில் கச்சிராயபாளையம் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டு மக்களை அச்சுறுத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.