/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சவுக்கு சாகுபடி 4 ஆண்டுகளில் இரண்டு மடங்கு... அதிகரிப்பு; பராமரிப்பு செலவு குறைவால் விவசாயிகள் ஆர்வம்
/
சவுக்கு சாகுபடி 4 ஆண்டுகளில் இரண்டு மடங்கு... அதிகரிப்பு; பராமரிப்பு செலவு குறைவால் விவசாயிகள் ஆர்வம்
சவுக்கு சாகுபடி 4 ஆண்டுகளில் இரண்டு மடங்கு... அதிகரிப்பு; பராமரிப்பு செலவு குறைவால் விவசாயிகள் ஆர்வம்
சவுக்கு சாகுபடி 4 ஆண்டுகளில் இரண்டு மடங்கு... அதிகரிப்பு; பராமரிப்பு செலவு குறைவால் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 14, 2025 03:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்பு செலவு குறைவால் கடந்த 4 ஆண்டுகளில் சவுக்கு சாகுபடி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 72 எக்டர் சாகுபடி பரப்பாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில், 3 லட்சத்து 60 ஆயிரத்து 217 விவசாயிகள் உள்ளனர். 91 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர்.
நெல், கரும்பு, வாழை, பயிறு வகை உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்ய மண் வளம் உள்ளது. 60 சவீத விவசாய நிலங்கள், பருவமழையை நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல், வேர்க்கடலை, எள், உளுந்து, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது நெல், கரும்பு, வேர்க்கடலைக்கு அடுத்தபடியாக சவுக்கு அதிக அளவில் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வானுார், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சவுக்கு விளைவிக்கப்படுகிறது.
இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது சவுக்கு சாகுபடி அதிகரித்துள்ளது.
பிற பயிர்களுக்கு பராமரிப்பு செலவு மற்றும் ஆட்கள் கூலி அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ப லாபம் கிடைப்பதும் இல்லை. இதனால், குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் கிடைக்கும் சவுக்கு சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர்.
அதன்படி, மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 11,244.21 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சவுக்கை 2024ம் ஆண்டு 21,030.32 எக்டராக இரு மடங்கு உயர்ந்துள்ளது.
காகித தயாரிப்பு, கட்டுமானப்பணி, விறகு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சவுக்கு மரம் தேவை இருக்கிறது. இதனால், இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும் 'ஸ்பீடு' எனப்படும் சி.எட்ச்., 5 ரக சவுக்கு தற்போது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஒரு கன்று 1.50 ரூபாயில் இருந்து 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு ஏற்பட்டாலும், ஏக்கருக்கு 60 முதல் 80 டன் விளைச்சல் இருக்கிறது.
இங்கு விளையும் சவுக்கு மரங்கள் தமிழக செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (டி.என்.பி.எல்.,) மற்றும் தனியார் வியாபாரிகள் வாங்குகின்றனர். டி.என்.பி.எல்., நிறுவனத்திற்கு இந்தாண்டு விவசாயிகள் நேரடியாக எடுத்துச் சென்றால், டன்னுக்கு 8,700 ரூபாய் வழங்கப்படுகிறது.
நிறுவன ஊழியர்கள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்தால் டன்னுக்கு 6,500 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், வியாபாரிகள் ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
மாவட்டத்தில், அதிகளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுவதால், அரசு காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படும் என கூறினார். ஆனால், இதுவரை அதற்கான உத்தரவு வரவில்லை.
இது குறித்து விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், நெல், வேர்க்கடலைக்கு மாற்றுப்பயிராக கரும்பு இருந்தது. அதில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால், நஷ்டம் ஏற்படுகிறது.
நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு பராமரிப்பு செலவு 20 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதனால், தற்போது சவுக்கு சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். கடந்த ஆண்டு டன்னிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்தனர். இந்தாண்டு சாகுபடி அதிகரித்ததால், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் காகித தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறியதால், அதிகளவிலான விவசாயிகள் சாகுபடி செய்தனர். இதுவரை காகித தொழிற்சாலை வரவில்லை. இதனால், சவுக்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
எனவே, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சவுக்கு மரங்களை டி.என்.பி.எல்., நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யவும், காகித தொழிற்சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.