/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
/
அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 21, 2025 07:34 AM

செஞ்சி : துத்திப்பட்டு அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செஞ்சி அடுத்த துத்திபட்டு கிரமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 216 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், இந்த பள்ளியில் தலைமையாசிரியர், நிரந்தர ஆசிரியர் ஒருவர் கூட இல்லை.
இங்கு 6 பேர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். தலைமையாசிரியர், நிரந்தர ஆசிரியர் யாரும் இல்லாததால் பள்ளிக்கு தேவையான வசதிகளை அரசிடம் இருந்து பெறவும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வழிநடத்தவும், பள்ளியை கண்காணிக்கவும் முடியவில்லை.
இந்த பள்ளிக்கு தலைமையாசிரியர், நிரந்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் பல முறை அரசிடம் முறையிட்டனர்.
இதில் எந்த பலனும் இல்லாததால் கடந்த இருதினங்களுக்கு முன், சாலை மறியல் செய்யவும், அரசு பஸ்சை சிறைபிடிக்க முடிவு செய்திருந்தனர். அனந்தபுரம் போலீசார் சமாதானப்படுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.