/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பலத்த காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து பாதிப்பு
/
பலத்த காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து பாதிப்பு
ADDED : ஆக 10, 2025 11:51 PM

விழுப்புரம், : விழுப்புரத்தில், காற்றுடன் பலத்த மழை பெய்து, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை 3:30 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், சாலையில் மழைநீர் வழிந்தோடியது.
விழுப்புரம் பஸ் நிலையம், பெருந்திட்ட வளாக மைதானத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. விழுப்புரம் நகராட்சி மைதானம், ரயில்வே மைதானம், முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பு, கோலியனுார் கூட்ரோடு, விழுப்புரம் திரு.வி.க., வீதி, நேருஜி சாலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
விழுப்புரத்தில் காற்றுடன் பெய்த மழையால், மாம்பழப்பட்டு பாளையம் அருகே சாலையில் புளிய மரம் விழுந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜானகிபுரம், பெரியார் நகர், வழுதரெட்டி, காணை பகுதிகளில் மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், புறநகர் கிராம பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
விழுப்புரம், வளவனுார், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.