தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்
தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்
UPDATED : நவ 25, 2026 06:38 PM
ADDED : நவ 25, 2026 06:38 PM
வானுார்: வட கிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்றினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானுார் தோட்டக்கலை உதவி இயக்குநர் மணிமேகலை செய்தி குறிப்பு:
தமிழகத்தில் பருவ மழை துவங்கியுள்ளதால், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாழை மரங்கள் காற்றில் சாய்வதை தடுக்க முட்டுக்கொடுக்க வேண்டும். கொய்யா, சப்போட்டா, நெல்லி உள்ளிட்ட பழமரங்களில் காய்ந்த மற்றும் தேவையற்ற கிளைகளை அகற்றி கவாத்து செய்ய வேண்டும்.
கொடி வகை காய்கறி பயிர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல்களை கூடுதல் ஊன்றுகோல்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
பயிர்களுக்கு உயிர் உரங்கள் மற்றும் உயிரி நோய்க்கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தி நோய் தாக்குதலைத் தடுக்க வேண்டும்.
கனமழை காலங்களில் நீர்ப்பாசனம் மற்றும் செயற்கை உரமிடுதலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
