/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்ணெண்ணெயுடன் மனு அளிக்க வருவோர் அதிகரிப்பு: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
/
மண்ணெண்ணெயுடன் மனு அளிக்க வருவோர் அதிகரிப்பு: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
மண்ணெண்ணெயுடன் மனு அளிக்க வருவோர் அதிகரிப்பு: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
மண்ணெண்ணெயுடன் மனு அளிக்க வருவோர் அதிகரிப்பு: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
ADDED : நவ 12, 2024 06:16 AM
விழுப்புரம்: தவறான வழிகாட்டுதலால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய், பெட்ரோலுடன் மனு அளிக்க வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பங்கேற்பர். பொதுமக்கள் பட்டா மாற்றம், வீட்டு மனை பட்டா, முதியோர் மற்றும் விதவை உதவி தொகை உட்பட பல்வேறு தேவைகள் மற்றும் பொது பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்க வருகின்றனர்.
மாவட்ட உயர்அதிகாரிகள் பொதுமக்கள் அளிக்கும் மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்வர்.
இதில், தங்களது சொந்த பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வருபவர்களில் சிலர், தவறான அணுகு முறையை மேற்கொள்கின்றனர். தங்களது மனு மீது அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்து மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்புகின்றனர்.
இதே நிலை ஒவ்வொரு வாரமும் தொடர்கிறது. ஒரு சில நேரங்களில் தனி நபர் மட்டுமின்றி குழந்தைகளை அழைத்து வந்த குடும்பத்துடன் மிரட்டுகின்றனர். இதுபோன்று, தவறான நபர்களின் வழிகாட்டுதலால் தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போலீசார் ஒரு சிலரை எச்சரித்து அனுப்புகின்றனர்.
சிலர் மீது மட்டுமே வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இதுபோன்று மிரட்டல் விடுப்பவர்களிடம், தற்கொலை மிரட்டல் விடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற தவறான கருத்தை ஒரு சிலர் பதிய வைத்து அனுப்பி வைப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறி பெட்ரோல், மண்ணெண்ணெய்யுடன் வருவோர் மீது பாரபட்சமின்றி போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.