/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
விதை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூலை 08, 2025 11:40 PM

விழுப்புரம்; விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில், கோலியனுார், கண்டமங்கலம், காணை, விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் மற்றும் முகையூர் வட்டார விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். இதில், வரும் மானாவாரி பட்டத்தில் அதிகளவில் சிறுதானிய பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்படும்.
விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைகளை பெற்றவுடன் விதை மாதிரி எடுத்து அனுப்பி அவற்றில் அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதை இருப்பு மற்றும் ரகங்களின் விபரங்களை விலைப்பட்டியலுடன் தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். பருவத்திற்கேற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
விதை கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், விதைகளுக்கான பதிவுச்சான்று, இருப்புப்பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெறாத அல்லது பதிவுச்சான்று இல்லாத விதைகளை விற்பனை செய்யக்கூடாது. விதை சட்டத்தை கடைப்பிடிக்காத விதை விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, விதை ஆய்வாளர் ஜோதிமணி, வேளாண் அலுவலர் ஷோபனா மற்றும் தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.