ADDED : மார் 22, 2025 03:53 AM

திண்டிவனம்: திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மினி பஸ் இயக்கத்திற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம், செஞ்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மினி பஸ் விரிவான திட்டத்தின் கீழ் 25 கி.மீ., துாரத்திற்கு மினி பஸ் இயக்குவதற்கு, சில வழித்தடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனால், ஒரு விணணப்பதாரரை மட்டும் குலுக்கல் முறையில், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி 24 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் 24 வழித்தடங்களில் ஒற்றை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் மினி பஸ் இயக்குவதற்கான ஆணையை வழங்கினார்.