/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கமிஷன் நெருக்கடியால் ஜல்ஜீவன் திட்டம் பாதிப்பு
/
கமிஷன் நெருக்கடியால் ஜல்ஜீவன் திட்டம் பாதிப்பு
ADDED : ஏப் 22, 2025 04:48 AM
விழுப்புரம் மாவட்டத்தில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கிராமங்களில் நடந்து வரும் நிலையில், கட்சியினர், அதிகாரிகள் சிலர், அதிகம் கமிஷன் கேட்பதால் பணிகளின் தரம் குறைவதாக புகார் எழுந்துள்ளது,.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் சமீபத்தில் இந்த புகார் தொடர்பாக பணிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து, அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், 'மாவட்டம் முழுதும் பல இடங்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் நடக்கிறது. அரசியல் கட்சியினர் மூலம் தொடக்கத்திலேயே கமிஷன் கொடுத்துதான், கான்ட்ராக்டர்கள் பணியை வாங்குகின்றனர்.
புதிய டேங்க்குகள் கட்டுவது, பைப் லைன்கள் போடுவது, வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்குவது என பணிகளை பிரித்து வழங்குகின்றனர். கிராமங்களுக்கு தகுந்தபடி 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணிகள் நடக்கிறது.
அரசியல் கட்சியினரின் கமிஷனுக்கு பிறகு, சில அதிகாரிகள் அதிகளவில் கமிஷன் கேட்டு, கறார் செய்வதால், ஒப்பந்ததாரர்கள் பணியின் தரத்தை குறைத்து, சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நீண்டகாலம் தாங்கும் தரமான பைப்புகள், சாதனங்கள் போன்றவற்றில் சமரசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்ட அதிகாரிகள் சிலர் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி கேட்கின்றனர்.
மறுத்தால், பில் வழங்குவதை தாமதப்படுத்துகின்றனர். ஒன்றியங்களில் இந்த நெருக்கடி இருப்பதால், பணியின் தரம் குறையும் அச்சம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர்.