/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி! தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி
/
ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி! தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி
ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி! தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி
ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி! தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி
ADDED : மார் 30, 2024 06:57 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரயில்வே கேட் மூடிய பிரச்னையை கண்டித்தும், திறக்க நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்தும் கிராம பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தும் வீடுகளில் கருப்புக் கொடியேற்றியதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்குச் செல்ல ஜானகிபுரம் வழியாக 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். இந்த வழியாக அரியலுார், கொளத்துார், காவணிப்பாக்கம், சித்தாத்துார் ஆகிய கிராமங்களுக்குச் செல்லலாம்.
கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரம் வரவும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல ஜானகிபுரம் வழிபாதை முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி தான், இந்த கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், ஜானகிபுரம் ரயில்வே கேட்டை திடீரென நிரந்தரமாக மூட இருப்பதாக சில தினங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான அறிவிப்பு பலகையை ரயில்வே கேட் அருகே வைத்தனர்.
இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையும் மீறி, கடந்த 22ம் தேதி நள்ளிரவில் ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகத்தினர் மூடினர்.
இதனால், கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரயில்வே கேட்டை திறக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்தனர்.
இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜானகிபுரம், கண்டமானடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி, நேற்று 200க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'ரயில்வே கேட்டை மூடியதால் மாற்று வழியில்லாமல் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் பாதித்துள்ளனர். இதனால் 5 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு ஜானகிபுரம் மேம்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
இப்படி சென்றால் சில தருணங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மூடிய ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியள்ளோம். தொடர்ந்து ரயில்வே கேட்டை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதோடு வரும் ஏப்ரல் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றனர்.
மேலும், ரயில் மறியல் போராட்டம் குறித்து கண்டமானடி, ஜானகிபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், கொளத்துார், வி.அரியலுார், சித்தாத்துார், வேலியம்பாக்கம், தளவானுார், திருப்பாச்சனுார், பிடாகம் கிராம மக்கள் சார்பில் வரும் 3ம் தேதி காலை 9:00 மணிக்கு வந்தே பாரத் ரயிலை மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

