/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் புதிய தாலுகா அறிவிப்பு... எப்போது?: 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோப்புகள்
/
கண்டமங்கலம் புதிய தாலுகா அறிவிப்பு... எப்போது?: 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோப்புகள்
கண்டமங்கலம் புதிய தாலுகா அறிவிப்பு... எப்போது?: 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோப்புகள்
கண்டமங்கலம் புதிய தாலுகா அறிவிப்பு... எப்போது?: 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கோப்புகள்
ADDED : ஆக 07, 2025 02:49 AM

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவை இரண்டாக பிரித்து, கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக உருவாக்குவதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பி, இரு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் தாலுகாவில், விழுப்புரம் குறுவட்டத்தில் 33 கிராமங்கள், காணை குறுவட்டத்தில் 29 கிராமங்கள், வளவனுார் குறுவட்டத்தில் 32 கிராமங்கள், கண்டமங்கலம் குறுவட்டத்தில் 29 கிராமங்கள் என மொத்தம் 123 கிராமங்கள் அடங்கியுள்ளன. மொத்தமுள்ள 42,772 ஹெக்டேர் பரப்பளவில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 4 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த தாலுகாவில் விழுப்புரம் மற்றும் வானுார் சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், கண்டமங்கலம், கிருஷ்ணாபுரம், கலிஞ்சிக்குப்பம், பா.நத்தமேடு, சொர்ணாவூர் மேல்பாதி, நவமால்காப்பேர், நவமால்மருதுார் உள்ளிட்ட பல கிராமங்கள் விழுப்புரத்திற்கு 30 கி.மீ., துாரத்தில் உள்ளன. இதனால், இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அரசு சான்றிதழ்கள், சேவைகள் பெறுவதற்கு கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறி வர வேண்டும். மேலும், தங்கள் கிராமத்தில் இருந்து விழுப்புரம் வந்து செல்வதற்கு ஒரு நாள் முழுவதும் வீணாகின்றது. இதனால், விழுப்புரத்தில் இருந்து பிரித்து கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏனெனில் கண்டமங் கலத்தில் காவல் நிலையம், பி.டி.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால், கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக உருவாக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக உருவாக்க அரசிற்கு, அதிகாரிகள் கோப்புகள் அனுப்பினர்.
அதில், கண்டமங்கலம் குறுவட்டம் மற்றும் விக்கிரவாண்டி தாலுகா சித்தலம்பட்டு குறுவட்டத்தில் இருந்து சில கிராமங்களை வரையறை செய்து இணைக்க கோப்புகள் தயார் செய்து அனுப்பினர்.
விழுப்புரத்தில் இருந்து கண்டமங்கலத்தை பிரிப்பதால், அதன் சுற்றுப்பகுதி கிராம மக்களின் அலைச்சலுக்கு தீர்வு ஏற்படும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோப்புகள் அனுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை கண்டமங்கலம் புதிய தாலுகாவிற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது புதிய தாலுகா அறிவிப்பிற்காக காத்திருக்கும் அனைத்து தரப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.