/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என் சோக கதையக்கேளு... முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் தாயுமானவர் திட்டத்தால் தொடரும் நெருக்கடி விற்பனையாளர்கள் புலம்பல்
/
என் சோக கதையக்கேளு... முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் தாயுமானவர் திட்டத்தால் தொடரும் நெருக்கடி விற்பனையாளர்கள் புலம்பல்
என் சோக கதையக்கேளு... முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் தாயுமானவர் திட்டத்தால் தொடரும் நெருக்கடி விற்பனையாளர்கள் புலம்பல்
என் சோக கதையக்கேளு... முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் தாயுமானவர் திட்டத்தால் தொடரும் நெருக்கடி விற்பனையாளர்கள் புலம்பல்
ADDED : நவ 04, 2025 01:18 AM
த மிழகத்தில் 70 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ரேஷன் பொருள்கள் எளிதாக கிடைக்கும் வகையில், அவர்களின் வீடு தேடி வழங்கும், தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
அதன்படி, ரேஷன்கடை விற்பனையாளர்கள் அந்தந்த பகுதியில் 70 வயதைக் கடந்த முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி பொருள்களை எடுத்துச்சென்று வழங்கி வருகின்றனர்.
அரசு தரப்பில் மக்களைக் கவரும் திட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு ஒத்துவராமல், குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இத்திட்டம் 1200க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் செயல்பாட்டில் உள்ளது. ஒரு ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் 30 முதல் 60 முதியோர் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதம்தோறும் வீடு தேடி ரேஷன் பொருள்களை எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்
ஒரு மினி சரக்கு வேனில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற அனைத்து ரேஷன் பொருள்களையும் ஏற்றிக்கொண்டு, ஒரு கடைக்குட்பட்ட பகுதியில் உள்ள முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்கு பி.ஓ.எஸ்., சாதனம் மூலம் கைரேகை பதிவு வாங்கி, உரிய பொருள்களை வழங்கி வருகின்றனர்.
வாரத்தின் முதல் மற்றும் கடைசி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இப்பணியை விற்பனையாளர்கள் மேற்கொள்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் மட்டுமே வேனுக்கான வாடகை கட்டணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒருமுறை வாடகை எடுத்தால், குறைந்தது 1,000 முதல் 2000 ரூபாய் வரை வாடகை தர வேண்டியுள்ளது. நகர பகுதியில் இது அதிகரிக்கிறது.
ஒரு முறை தேடிச் சென்றால், அட்டைதாரர்கள் வீட்டில் இல்லை எனில் மறு முறை போக வேண்டியுள்ளது. வீடுகள் நீண்ட தொலைவுகளில் அமைந்துள்ளதால், செலவினங்களும், நேரமும் விரயமாகிறது. அந்த நேரத்தில் கடைக்கு வந்து காத்திருக்கும் பிற மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரத்தில் வீடுதேடி முதியவர்களுக்கு பொருளை எடுத்துச் செல்லும்போது, பிற அட்டை தாரர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் என, எங்களுக்கும் சர்க்கரை, கோதுமை, பாமாயில் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இதனால், சில விற்பனையாளர்களை தாக்கப்படுகின்றனர்.
தற்போது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கும்படி இத்திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போதிய ஆட்களின்றி பணி நெருக்கடி உள்ள நிலையில், இத்திட்டத்தால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. செலவினத்தை சமாளிக்க வாகன வாடகையை உயர்த்துவதுடன் இதில் இருக்கும் சிக்கல்களை முழுமையாக தீர்க்க நடவடிக்கை வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

