/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி பஸ்களின் வழித்தட ஆணைகள் வழங்க குலுக்கல்
/
மினி பஸ்களின் வழித்தட ஆணைகள் வழங்க குலுக்கல்
ADDED : மார் 16, 2025 11:22 PM

விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்டத்தில் மினி பஸ்கள் வழித்தடங்களுக்கான ஆணைகள் வழங்கிடும் வகையில் குலுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மினி பஸ்சிற்கான புதிய விரிவான திட்டம் இந்தாண்டு, அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளுக்கு செல்லவும், பஸ் வசதியற்ற மக்களுக்கு, எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருந்தால், இணைப்பு ஏற்படுத்தி உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மினி பஸ்சிற்கான கட்டண திருத்தம் வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதையொட்டி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு கடந்த 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் மினி பஸ் வழித்தடங்களுக்கான ஆணைகள் வழங்கிட, குலுக்கல் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.
இதில், 105 வழித்தடங்களில் 32 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். 26 வழித்தடங்களுக்கு குலுக்கள் நடந்த நிலையில், தேர்வானவர்களுக்கு அந்த வழித்தடத்தில் மினி பஸ் போக்குவரத்து சேவை புரிவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 6 வழித்தடங்களுக்கு இன்று (17 ம் தேதி) குலுக்கள் நடக்கவுள்ளது.போட்டியில்லாத வழித்தடத்திற்கு 39 பேர் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தோருக்கு போட்டியின்றி தேர்வு செய்து அவர்களுக்கு மினி பஸ் போக்குவரத்து சேவை புரிவதற்கான ஆணைகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜகுமார், துணை போக்குவரத்து ஆணையர் பட்டப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அருணாச்சலம், முக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.