ADDED : செப் 25, 2024 03:48 AM

பரிசளிப்பு விழா
திண்டிவனம்: மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 10ம் ஆண்டு மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி திண்டிவனம் அடுத்த எறையானுாரில் நடந்தது. போட்டியில் 5 வயது முதல் 17 வயது வரையிலான 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டிகளுக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் இணைச் செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். திண்டிவனம் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலாளர் மன்னன் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,பொருளாளர் வழக்கறிஞர் ரமணன் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சலவைத் தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஏழுமலை, முத்துவேல், ஏழுமலை, சக்திவேல், நடராஜன், மருதவேல் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், காணை கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கென்னடி பள்ளி மாணவர்கள் சாதனை
திண்டிவனம்: மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் விளையாடினர். இதில், 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட கோகோ, மேஜை பந்தாட்டம் போட்டிகளில் மாணவிகள் முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்ட கபடி போட்டியில், மாணவர்கள் முதலிடத்தையும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். சதுரங்க போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் சண்முகம், முதல்வர் சந்தோஷ், இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.
பூச்சி விரட்டி கன்று வழங்கும் விழா
விக்கிரவாண்டி: வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த விவசாயிகளுக்கான இயற்கை பூச்சி விரட்டி கன்று வழங்கும் நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் கங்கா கவுரி தலைமை தாங்கினார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கையாக உயிர் பூச்சி கொல்லி பண்புடைய ஆடா தொடா,நொச்சி போன்ற கன்றுகளை வழங்கினார். உதவி வேளாண் அலுவலர் ரமேஷ், ராமமூர்த்தி உட்பட முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
கலந்தாய்வுக் கூட்டம்
திண்டிவனம்: தாலுகா அலுவலகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தை வன்முறை தடுப்பு குறித்து நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு, தாசில்தார் சிவா தலைமை தாங்கினார். அதேகொம் பின்னகம் அறங்காவலர் சீனுபெருமாள், மாவட்டக் கல்வி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தனர். மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். கூட்டத்தில் பெண் குழந்தைகளின் ஒழுக்க முறைகளை குறித்து விளக்கப்பட்டது. ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்துகண்ணன், முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஜைனுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் நன்றி கூறினார்.
விதை உற்பத்தி பயிற்சி முகாம்
திருவெண்ணெய்நல்லுார்: பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடந்த கரும்பு விதை உற்பத்தியாளர் குழுக்களுக்குக்கான விதை உற்பத்தி பயிற்சி முகாமிற்கு, ஆலையின் செயலாட்சியர் முத்து மீனாட்சி தலைமை தாங்கினார். கரும்பு விருத்தி அலுவலர் வில்லியம், கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், சதீஷ்குமார் விவசாயிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த மானிய திட்டம், அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விளக்கினர். முகாமில் கரும்பு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பனை விதை நடும் விழா
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை ஏரியில் மரம் நடுவோர் சங்கம், சித்தகிரி முருகன் லயன்ஸ் கிளப், ஊராட்சி சார்பில் 3000 பனை மரங்கள் நடும் விழா நடந்தது. மரம் நடுவோர் சங்கத்தினர் முருகன், பெருமாள் வரவேற்றனர். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, யாரப்பேக், மாது, மணிகண்டன், பழனி முன்னிலை வகித்தனர். ஊராட்சி பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
கண்டமங்கலம்: வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சேவியர் சந்திரகுமார் குடற்புழு நீக்க மத்திரைகள் வழங்கினார். கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவுதம், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி மற்றும் மருத்துவ குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
காத்திருப்பு போராட்டம்
மயிலம்: பி.டி.ஓ., அலுவலகம் எதிரே இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, வீடூர் கிளைத் தலைவர் மூவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ., நிர்வாகி ராமதாஸ் உட்பட பலர் பேசினர். நிர்வாகிகள் லட்சுமணன் தைரியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், கிராம மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்
மயிலம்: சித்தணி கிராமத்தில் ஆத்மா திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு, வேளாண்உதவி இயக்குனர் மகாலட்சுமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, முண்டியம்பாக்கம் விரிவாக்கத்துறை உதவி மேலாளர் தேவராஜ் சொட்டு நீர் மானியம் மற்றும் அதன் பயன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலாளர் அவிநாசிலிங்கம் கோட்ட அலுவலர் வெங்கடசுப்பா, களப்பணியாளர்கள், துணை வேளாண் அலுவலர் சிவநீலம் மற்றும் ஆத்மா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளியில் மதிய உணவு
செஞ்சி: மத்திய அரசின் திதீபோஜனா திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் அரசு பள்ளிகளில் விருப்பத்தின் பேரில் பொது மக்கள், தன்னார்வலர்கள் வடை, பாயாசத்துடன் ஒரு நாள் உணவு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வல்லம் அடுத்த கொங்கரப்பட்டு அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளியில் வடை, பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடக்கக் கல்வி அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்கள் மீனாட்சி, சந்திரா வரவேற்றனர். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சத்துணவு அமைப்பாளர் புவனேஸ்வரி, கல்வி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாலை பணி துவக்க விழா
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி காணை அடுத்த கெடார் -செல்லங்குப்பம் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 1.99 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை பணியை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,கள் சிவக்குமார், சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன், ஊராட்சி தலைவர் இந்திரா, துணை தலைவர் ஏஞ்சலினாதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.