ADDED : அக் 12, 2024 11:04 PM
அறிவியல் மன்ற விழா
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த வேதியியல் துறை மன்ற விழாவில் மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். துறை தலைவர் தர்மராஜா சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் ராஜ்குமார், ராஜா, கனகராசு, அறிவழகன் வாழ்த்தி பேசினர். மூன்றாம் ஆண்டு மாணவிகள் வேதியியல் துறையின் சிறப்புகள் குறித்து பேசினர். விழாவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
சங்கராபுரம் அடுத்த சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடந்த போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடியிருப்பு பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஆன் லைன் மோசடி, சைபர் குற்றங்களை தடுப்பது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கருத்தரங்கு
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, அறிவுசார் சொத்து உரிமைகள் பிரிவு சார்பில் நடந்த வேலைவாய்ப்பு கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் சிவகுமார் வரவேற்றார். கருத்தரங்கில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளார் அறிவொளி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
சைக்கிள் வழங்கும் விழா
அனந்தபுரம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., 11ம் வகுப்பு படிக்கும் 246 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி துணைச் சேர்மன் அமுதா கல்யாண்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம் தி நியூ ஜான்டூயி பள்ளியில் ஜே.ஆர்.சி., மற்றும் சாரண இயக்கம் சார்பில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு, ரோட்டரி கிளப் தலைவர் துரைராஜ், தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவர்கள் துண்டு பிரசுரம் மற்றும் துணிப்பையை வழங்கிச் சென்றனர். நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு விருது
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரியில் கர்மயோகி டிரஸ் சார்பில் நடந்தது. இதில், கொணமங்கலம் சிருஷ்டி மாற்றுத்திறனாளி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தனி திறன் பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கான 'நாயகன்' விருதை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். விருது பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் கணேசன், பள்ளி செயலாளர் லட்சுமி பாராட்டினர்.
களப்பணி பயிற்சி முகாம்
கண்டாச்சிபுரம் அடுத்த புலிக்கல் ஊராட்சியில் புள்ளியியல் துறை சார்பில் நடந்த வேளாண் துறை அலுவலர்களுக்கான களப்பணி பயிற்சி முகாமிற்கு, துறை துணை இயக்குனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். முகையூர் வேளாண் அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். முகாமை திருக்கோவிலுார் கோட்ட இயக்குனர் செல்வராஜ் துவக்கி வைத்தார். புள்ளியியல் ஆய்வாளர் சிவதாஸ் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் மூலம் பயிர் அறுவடை தரவுகள் குறித்து பயிற்சி அளித்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம் இந்திய மருத்துவ சங்கம், கல்லுாரி பொது அறுவை சிகிச்சை துறை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த ஊர்வலத்திற்கு, கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சவிதா, சுகாதார துணை இயக்குனர் லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இடு பொருட்கள் வழங்கல்
திருச்சிற்றம்பலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரபி பருவத்திற்கு விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் உளுந்து விதைகளை வழங்கினார். வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் வாழ்வரசி, விதைப் பண்ணை விவசாயிகள் பங்கேற்றனர்.
வயல் விழா நிகழ்ச்சி
கண்டமங்கலம் அருகே சொரப்பூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் மூலம் நடந்த வயல் விழா நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் விமலா தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயி நடராஜன் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி வரவேற்றார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கணபதி, நெற்பயிரை பாதிக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு இயற்கை வழியில் மேலாண்மை முறை மற்றும் எலி ஒழிப்பு மேலாண்மை, நெல் வயலில் பச்சை பாசி இடுவது குறித்து விளக்கினார்.