ADDED : நவ 11, 2024 05:45 AM

ஆலோசனை கூட்டம்
செஞ்சி: தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் சிறுபாசன ஏரிகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை முன்னிலை வகித்தனர். ஏ.பி.டி., பழனி வரவேற்றார். கூட்டத்தில், செம்மேடு, தேவந்தாங்கல் ஏரியை செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை மூலம் புனரமைப்பது குறித்து சர்க்கரை ஆலை மேலாளர் தனபாலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒன்றிய உதவி பொறியாளர் சதீஷ்குமார், ஊராட்சி தலைவர் நீலாவதி பஞ்சாட்சரம், விவசாயிகள் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் தேர்வு
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் சவுத் இந்தியா சுகர்ஸ் லிமிடெட் பணியாளர்கள் சங்க பேரவைக் கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதிய தலைவராக வாசுதேவன், துணைத் தலைவராக லட்சுமி நாராயணன், செயலாளராக பாலசுப்ரமணியன், துணை செயலாளராக கோபு ,பொருளாளராக முருகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டிவனம்: போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாகவரம், வெள்ளிமேடுபேட்டை, மொளசூர் கிராமங்களில் நடந்தது. நிகழ்ச்சியில், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் தொடர்பாகவும், போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம மக்களுடன், கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர் கோமதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆட்டோ ஸ்டாண்டுக்கு தனி இடம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் நகரத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் பொதுவாக நிறுத்தும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி திண்டிவனம் நகர அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவரிடமும் மனு அளித்தனர்.
சிரவண தீப உற்சவம்
விழுப்புரம்: ப.வில்லியனுார் கனகவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம், திருவோண நட்சத்திர உற்சவம் நடந்தது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாள், கருட கம்பம் எதிரில் எழுந்தருளினார். மாலை 5:30 மணிக்கு சிரவண தீபம் ஏற்றப்பட்டது. சுவாமிக்கு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். கல்லுாரி ஆளுநர் மதிவாணன், இயக்குனர் நளினி, துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளர் கோயம்புத்துார் பி.எஸ்.ஜி., கல்லுாரியின் முன்னாள் கணினி அறிவியல் துறைத்தலைவர் முரளி, செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினார். கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வகுப்பறை கட்டடம் திறப்பு விழா
விக்கிரவாண்டி: அன்னியூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் கீழ் கூடுதலாக 3 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்ததை அடுத்து, தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா வகுப்பறையில் குத்துவிளக்கேற்றினார். தலைமை ஆசிரியர் சேகர், காணை ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், துணை சேர்மன் வீரராகவன், பி.டி.ஓ., சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கற்றல் திறன் குறித்த கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார வள மையத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கற்றல் திறன் மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்திற்கு, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் சீனுவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி , மாணவர்கள் கல்வித் திறனில் மேம்பாடு அடைய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 71 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
மா.கம்யூ., பொதுக்கூட்டம்
உளுந்துார்பேட்டை: மா.கம்யூ., 24வது செந்தொண்டர் ஊர்வலம் விருத்தாசலம் சாலையில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மணிகூண்டு சென்றடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. வரவேற்பு குழு செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தலைவர் சேகர் வரவேற்றார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி கட்டடம் திறப்பு விழா
சங்கராபுரம்: பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் 95 லட்சம் ரூபாய் செலவில் புதிய விடுதி கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா சென்னையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விடுதி கட்டடத்தில் ஊராட்சி தலைவர் துரைசாமி குத்துவிளக்கேற்றினார். பள்ளி நிர்வாகி இதயதுல்லா வரவேற்றார். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம், முன்னாள் தலைவர் மாயகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மா.கம்யூ., கட்சி சார்பில் கொசப்பாடி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் சாமிகண்ணு தலைமை தாங்கினார். ஜெய்சங்கர், ஏழுமலை, சசிகுமார், சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பி.டி.ஓ., அய்யப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற பி.டி.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
விழுப்புரம்: சேம்பர் ஆப் காமர்ஸ் கலந்தாய்வு கூட்டம், நாளை 12ம் தேதி விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் மதியம் 12:00 மணியளவில் நடக்கிறது. கூட்டத்தில், மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்கிறார். கூட்டத்தில், நடைபாதைகளில் பண்டிகை காலங்களில் அனுமதியின்றி தற்காலிக கடைகள் நடத்தப்படுவதால் நிரந்தரமான கடை வியாபாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க வழிமுறை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளத. இத்தகவலை மாவட்ட பொதுச்செயலாளர் பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் குறைகேட்பு கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகாவில் பணிபுரியும் தொடக்க பள்ளி, நடுநிலைபள்ளி, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குறைகேட்புக் கூட்டம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனிவாசன் ஆசியோர் ஆசிரியர்களிடமிருந்து 10 கோரிக்கை மனுக்களைப் றெப்றனர். பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார்.