ADDED : நவ 15, 2024 04:59 AM

விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கம் மற்றும் போலீசார் நேற்று, நான்கு முனை சாலை சந்திப்பில், சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடம், துண்டு பிரசுரம் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு மேற்கொண்டனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனங்களுக்கான ஆவணங்கள் புதுப்பித்தும், இன்ஸ்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோரிக்கை முழக்க ஊர்வலம்
அவலுார்பேட்டையில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கோரிக்கை முழக்க ஊர்வலத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மரம் நடுவோர் சங்கத் தலைவர் முருகன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தேசிய நுாலாக திருக்குறளையும், ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் ஊர்வலம் சென்றனர். லயன்ஸ் சங்க செயலாளர் தண்டபாணி, பொருளாளர் மணியரசன், பாஸ்கர், சத்தியமூர்த்தி, தமிழ் சங்க தலைவர் புருஷோத்தமன் பங்கேற்றனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
மயிலம் அடுத்த சாலை கிராமத்தில் நடந்த சட்டசபை தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு தொகுதி பார்வையாளர் கடலுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன் முன்னிலை வகித்தனர். சேர்மன் யோகேஸ்வரி வரவேற்றார். கூட்டத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தொகுதி தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். பாக முகவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திருக்கல்யாணம்
விழுப்புரம், வண்டிமேடு அபிநவ மந்த்ராலயம் கோவிலில் துளசி தாமோதர் திருக்கல்யாணத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சங்கல்பம், ஆவாஹனம், தீபாராதனை, மந்திர புஷ்பாஞ்சலி உட்பட பல்வேறு பூஜை நடந்தது.
தொடர்ந்து துளசி தாமோதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற மனு
திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் நீர்வரத்து ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திண்டிவனம் தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில், விட்டலாபுரம் கிராம நீர்வரத்து ஓடைகளில் மற்றும் ஏரியில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முறையாக துார்வாரி மழை நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கண் பரிசோதனை முகாம்
செஞ்சி வித்யவிகாஸ் மெரிக்மேல்நிலை பள்ளியில் பாலாஜி கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமை பள்ளி நிர்வாக குழு தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். செயலாளர் அரங்க திருமாறன், பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பொதுமக்கள், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
அரசு ஊழியர் சங்க மாநாடு
விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தி.மு.க., ஆய்வு கூட்டம்
விக்கிரவாண்டி அடுத்த செ.குன்னத்துாரில் நடந்த தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு கூட்டத்திற்கு, தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவி வரவேற்றார். தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி சரிபார்த்தல், கட்சி வளர்ச்சி பணி, 2026 தேர்தல் பணி குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். கண்காணிப்பு குழு எத்திராசன், காணை ஒன்றிய செயலாளர்கள் முருகன், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் தின விழா
திண்டிவனம், முருங்கம்பாக்கம் ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, பள்ளி தாளாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் தொழிலதிபர் தங்கபழம், மாணவர்கள், பெற்றோர்கள் செய்திருந்த கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு, பேசினார். விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ரத்ததான முகாம்
கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் துணை சுகாதார நிலையத்தில் விழுப்புரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அதிகாரி ஆர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரஞ்சிதம் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுடர் வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் பங்கேற்றனர். ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு ஆகியோர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தின விழா
கண்டமங்கலம், பள்ளிச்சேரி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, தலைமையாசிரியர் பொன்மலர் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் மதிமன்னன் வரவேற்றார். கலெக்டரின் குழந்தை தின விழா வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குழந்தைகள் வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை குறித்து பேசினார்.
வழியனுப்பு விழா
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் நடந்த பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., இறுதியாண்டுமாணவர்கள் வழியனுப்பு விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
டாக்டர் கவிதா சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இறுதியாண்டு நர்சிங் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கான உறுதிமொழியேற்றனர். கல்லுாரி துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் தின விழா
மயிலம் அடுத்த கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். வானவியல் மன்றம் கருத்தாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஜெயராஜ் பிரபு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பாட்டு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் ரேகா, குமரவேல், கோவிந்தன், அம்ரோஸ், புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.