ADDED : பிப் 13, 2024 11:33 PM

பள்ளி ஆண்டு விழா
கண்டமங்கலம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் சுமதி, கண்காணிப்பாளர் பொன்னுசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் தேமொழி வரவேற்றார். ஆசிரியர் நிர்மலா ஆண்டறிக்கை வாசித்தார். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
செஞ்சி: ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் செஞ்சி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பஸ்சில் அமைக்கப்பட்ட கண்காட்சி நடந்தது. போக்குவரத்து கழக கிளை மேலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தேசிய சாரணர் படை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் வரவேற்றார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டை ராஜன் கண்காட்சியில் இருந்த புகைப்படங்கள் மூலம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கினார். ஆசிரியர்கள் மோகனசுந்தரம், அன்பரசி மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.
மாற்றுக் கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
திருவெண்ணெய்நல்லுார்: ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 37; அ.தி.மு.க., கிளை துணைச் செயலாளர். இவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி விழுப்புரம் மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் வேலு முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் பா.ஜ., இணைந்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், ஆன்லைன் மோசடி குறித்து நடந்த மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ரயில் நிலையத்தில் துவங்கிய ஊர்வலம், நான்கு முனை சாலை சந்திப்பில் முடிந்தது.
ஊர்வலத்தில், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆன்லைன் மோசடிகள் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இணையவழி குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கல்லுாரி முதல்வர் சிவகுமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆராய்ச்சி கருத்தரங்கம்
விழுப்புரம்: அசோகபுரி கே.ஜி., பார்மசி கல்லுாரியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் அதற்கான புதிய மருந்துகளை மூலிகையிலிருந்து கண்டறியும் முறை குறித்து சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆப்ரிக்கா, ஜாம்பியா காப்பர் பெல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் வேங்கடஜோதி ராமாராவ் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் செல்வம் நன்றி கூறினார்.
வக்பு வாரியம் மூலம் கட்டுமானப் பணி
விழுப்புரம்: பாப்பாங்குளத்தில் உள்ள உமர் ஷா அவுலியா தர்கா கபர்ஸ்தான் சுற்றுச் சுவர் கட்டுமானப்பணி துவங்கியது. தமிழ்நாடு அரசு வக்பு வாரியம் மூலம் மராமத்து மானிய நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் மஸ்தான், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி வாசல் முத்தவல்லி ஹையாத், செயலாளர் பாபுலால், டாக்டர் சேகர், தி.மு.க., நகர சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்பு, கிளைச் செயலாளர் ஜானி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஜூம்மா மசூதி கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். கடலுார் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் சபியுல்லா, ஆய்வாளர் ஷேக் அகமது, விக்கிரவாண்டி ஜமாத் முத்தவல்லி அப்துல் சலாம்,பொருளாளர் சையது முஸ்தபா,செயல் அலுவலர் அஷ்ரப் உசேன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பசுமைக்குழு கூட்டம்
விழுப்புரம்: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பசுமை குழுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தின் வனப்பரப்பு அளவை 33 சதவீதமாக உயர்த்த மாவட்ட அளவிலான செயல்திட்ட 2024-25 ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டு, அனைத்து குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக ஏற்கப்பட்டது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில், 12.50 லட்சம் மரக்கன்றுகள் நட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியோடு அகற்றப்படும் மரங்களுக்கு, ஒரு மரக்கன்றுக்கு 10 மடங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய செயல்திட்ட அறிக்கை சமர்பித்த பின் மரக்கன்றுகள் அகற்றிட அனுமதி வழங்கப்பட உள்ளது. நடவு செய்யும் மரக்கன்றுகளை https://greentnmission.com/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி ஆண்டு விழா
செஞ்சி: சாணக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் யாஸ்மின் வரவேற்றார். பள்ளி முதல்வர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற எஸ்.பி., கலியமூர்த்தி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் சிறப்புரையாற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ஷோபானவிற்கு தங்க நாணயம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள், மரக்காணம் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் நரேன், திண்டிவனம் மரகாதாம்பிகை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜவேலு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளி ஆண்டு விழா
விக்கிரவாண்டி: அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கல்வி அறக்கட்டளை நிர்வாகி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார். ஆசிரியை ராணி ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பிரியா பூபாலன், பேரூராட்சி கவுன்சிலர் சுதா பாக்கியராஜ், முன்னாள் கவுன்சிலர் சசிக்குமார், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நுால் வெளியீட்டு விழா
விழுப்புரம்: நகராட்சி திடலில் நடந்த புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் செங்குட்டுவன், ராஜமாணிக்கம், கவிஞர்கள் நாஞ்சில் ராஜேந்திரன், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன், சுபாஷ், முருகன் ஆகியோர், தங்களது படைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, எழுத்தாளர் கலியன் எழுதிய கதறும் கருவறை என்ற நுால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் செங்குட்டுவன் வெளியிட, மாவட்ட நூலக அலுவலர் காசிம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கவிஞர் அறிவுமதி, கவிஞர் கவிதாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக நடந்த விந்தை விழுதுகள் நிகழ்ச்சியில், விழுப்புரத்தில் இருந்து கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்றவர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.
தாத்தா பாட்டி தினம்
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவியரின் தாத்தா, பாட்டிகள் சிறப்பு விருந்தினராக வரவழைத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஜான்சி பிரியா வரவேற்றார். ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாய்களுக்கு கருத்தடை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதிகளில் நாய்களின் பெருக்கம் அதிகமானதை அடுத்து நேற்று பேரூராட்சியில் திரிந்த நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கருத்தடை செய்ய பேரூராட்சி செயல்அலுவலர் ேஷக் லத்தீப் உத்திரவின் பேரில் பணியாளர்கள் நாய்களை பிடித்தனர்.பின்னர் விக்கிரவாண்டி கால் நடை மருத்துவ மனையில் கால்நடைதுறை மாவட்ட இணை இயக்குனர் லதா தலைமையில் , உதவி இயக்குனர் மோகன்,டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 40 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தும் , 30 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தினர். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி , செயல்அலுவலர் ேஷக் லத்தீப்,துப்புரவு ஆய்வாளர் ராஜா,மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

