ADDED : பிப் 15, 2024 10:20 PM

கல்லுாரியில் கட்டுரைப் போட்டி
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'சமூக நீதிக்காவலர்' தலைப்பில், மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி நடந்தது. இப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்த்துறை 3ம் ஆண்டு மாணவி தீர்த்தனாவிற்கு 1,500 ரூபாய், 2ம் இடம் பிடித்த தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவி திவ்யாவிற்கு 1,000 ரூபாய், 3ம் இடம் பிடித்த ஆங்கிலம் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி அபிராமிக்கு 500 ரூபாய் பரிசுகளை கல்லுாரி முதல்வர் வில்லியம் வழங்கினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் இளங்கோ செய்திருந்தார்.
பள்ளி ஆண்டு விழா
வானுார்: புள்ளிச்சப்பள்ளம் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, ஆசிரியை சாந்தி வரவேற்றார். தலைமையாசிரியர் (பொறுப்பு) ராஜேஷ் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாலா முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலைச்செல்வம் தொகுத்து வழங்கினார்.
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: சி.ஐ.டி.யூ., போக்குவரத்து தொழிற் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க கிளைத் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலர்கள் மணி, ஏழுமலை, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத் தலைவர்கள் குணசேகரன், வேலு, நடராஜன், தெய்வீகன், சுந்தரபாண்டியன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கண்டன உரையாற்றினர். போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வேளாண் அதிகாரி ஆய்வு
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி, காணை வட்டார வேளாண் அலுவலகத்தில் உள்ள விதை இருப்பு கிடங்குகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சார பயன்பாடு குறித்து ஆரியூர் கிராமத்தில் ஆய்வு செய்தார். பின், சாமை பயிர் அனுசரணை களத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தி, வேளாண்மை அலுவலர் சரவணன், விதை சான்று அலுவலர் சுதா உட்பட பலர் உடனிருந்தனர்.
மாணவர்கள் களப்பயணம்
விழுப்புரம்: காரைக்கால் பண்டித ஜவஹர்வால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவ, மாணவியர்கள் குச்சிப்பாளையம் பகுதிகளில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திண்டிவனம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்தில் களப்பயணம் மேற்கொண்டனர். உதவி இயக்குனார் சரவணன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். மேலும், வேளாண்மை உதவி இயக்குனர் நரசிம்மா ஆத்மா திட்டம் மற்றும் மானிய விலையில் உரம் வழங்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
குறைகேட்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை வழங்குவதற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாமிற்கு, ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கி, மனுக்களைப் பெற்று விசாரித்தார். தகுதியுடைய வேலை அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மனுக்கள் உடனே பரிசீலனை செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறினாளிகள் பங்கேற்றனர்.
சட்டப் பயிற்சி கருத்தரங்கம்
திண்டிவனம்: கோனேரிக்குப்பம் சரசுவதி சட்டக்கல்லுாரியில் நடந்த சட்டப்பயிற்சி பட்டறை கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் சுகுமாறன், வேலன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செம்மனேரி பாலாஜி, புகழேந்தி சிறப்புரையாற்றினர். சட்டக்கல்லுாரி பேராசிரியர் ஜானகிராமன் சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு மாணவர்களிடம் விளக்கமளித்தார். பேராசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாட்ட நிறைவு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலக மைதானத்தில், துவங்கிய ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக, சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாணிக்கம் கொடியசைத்து வைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.
ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்க கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பழனிவேல் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் சந்திரன், கோவிந்தன், செல்வராஜ், சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விரைவு ரயில்களில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓயவூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மஞ்சள் பை விழிப்புணர்வு
அவலுார்பேட்டை: மேல்மலைனுாரில், அவலுார்பேட்டை மரம் நடுவோர் சங்கம் மற்றும் சித்தகிரி முருகன் லயன்ஸ் கிளப் சார்பில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த வினாடி, வினா போட்டி நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்
மரக்காணம்: மரக்காணம் பஸ் நிலையத்தில் நடந்த, கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தினம் மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் பங்கேற்றனர். ஊர்வலம், முக்கிய சாலை வழியாக மரக்காணம் தாலுகா அலுவலகம் சென்றடைந்தது. அங்கு தாசில்தார் பாலமுருகன் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து பேசினார். இன்ஸ்பெக்டர் பாபு குழந்தை தொழிலாளர்கள் தடுப்புக் குறித்து உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர்.
கலெக்டருக்கு விவசாயிகள் நன்றி
விழுப்புரம்: கண்டமங்கலம்: வானுார் மற்றும் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 406 விவசாயிகள், தாங்கள் கரும்புகளை முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு வழங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு கரும்பு அரவைக்கான ஒரு டன் கரும்புக்கு 195 ரூபாய் ஊக்கத் தொகை வீதம், 891 டன் கரும்புக்கு 71 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை 406 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகள், கலெக்டர் பழனியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். விவசாய சங்க நிர்வாகிகள் கலிவரதன், முருகையன், பாஸ்கர், ஜெயகோபி, குமார் பங்கேற்றனர்.
பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், மோகன், வினோத், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் முரளி வரவேற்றார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் அலுவலகத்தை திறந்து வைத்தார். .விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் குணாளன், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கண் பரிசோதனை முகாம்
வானுார்: கழுப்பெரும்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜவேலு வரவேற்றார். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.