ADDED : மார் 08, 2024 11:26 PM

கண் சிகிச்சை முகாம்
கள்ளக்குறிச்சி: ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் இமானுவேல் சசிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு வரவேற்றார். முகாமிற்கு நிதியுதவி வழங்கிய பச்சையம்மன் மாடன் ரைஸ் மில் முத்துசாமி, கன்னிகா பரமேஸ்வரி மாடர்ன் ரைஸ் மில் விஸ்வநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் குழுவினர் 370 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.
மனநல நல்லாதரவு மன்ற விழா
கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மனநல நல்லாதரவு மன்ற விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நேரு தலைமை தாங்கினார். டாக்டர்கள் பழமலை, சமீம், பொற்செல்வி, அனுபமா, பேராசிரியர் செல்வராஜ், நிர்வாக அலுவலர் அசோகன் சிறப்புரையாற்றினர். விழாவில் மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்திற்கும் ஆலோசனை, சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்திடக் கோரி கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஹிந்து இளைஞர் முன்னணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், தமிழக அரசு போதை பொருட்களை முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போலீசார் விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சில தினங்களாக, குழந்தைகள் கடத்தப்படுவதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை சிலர் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வாறு, குழந்தை கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் ஆட்டோ மற்றும் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு, குழந்தை கடத்தல் பற்றிய தவறான செய்திகள் குறித்தும், அந்த தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். சந்தேக நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பரிசளிப்பு விழா
விழுப்புரம்: அரசு கலைக் கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழாவின் நிறைவாக பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் குணசேகர் வரவேற்றார். மாவட்ட நுாலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார், துறை தலைவர்கள் சேட்டு, பூபதி, ஸ்ரீதேவி வாழ்த்திப் பேசினர். வாசகர் வட்டத் தலைவர் சொக்கநாதன், தமிழ்த் துறைத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட நுாலக அலுவலர் காசிம் சிறப்புரையாற்றினர். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சத்துணவு மையங்களுக்கு பாத்திரங்கள் வழங்கல்
செஞ்சி: ஒன்றியத்தில் உள்ள 132 சத்துணவு மையங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக அரசு சார்பில் சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த மைய சத்துணவு பொறுப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., சீத்தா லட்சுமி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., முல்லை முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் சத்துணவு பொறுப்பாளர்களிடம் சமையல் பாத்திரங்களை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விரிவுரை நிகழ்ச்சி
விழுப்புரம்: தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சி துறை சார்பில் 'வேலை வாய்ப்பில் மென்மையான திறன்கள்' தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. புனித ஜோசப் கல்லுாரி ஆங்கில துறைத் தலைவர் ஜெயபால், பணியிடத்தில் மென் திறன்களின் தேவை, நேர்காணலின் போது தன்னம்பிக்கையை எப்படி வளர்ப்பது பற்றி கூறினார். தொடர்ந்து, மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது. 90 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
விளையாட்டுப் போட்டி
விக்கிரவாண்டி: வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 'இணைவோம்; மகிழ்வோம்' தலைப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களை சராசரி மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. வள மைய மேற்பார்வையாளர் உமாதேவி வரவேற்றார். பரிசளிப்பு விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி பரிசு வழங்கினார். துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர் ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
கொடி நாள் நிதி வழங்கல்
கள்ளக்குறிச்சி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியை கொடிநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக இந்த ஆண்டு, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லுாரியிலும், பொதுமக்களிடமும் திரட்டிய நிதியை கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் ஒப்படைத்தனர். ஆர்.கே.எஸ். கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், என்.சி.சி., அலுவலர் பாண்டியன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கிரிக்கெட் பயிற்சி மையம் திறப்பு
விழுப்புரம்: கலெக்டர் அலுவலகம் அருகே கிரிக்கெட் அகாடமியின், தயாளன் விளையாட்டு அரங்க கிரிக்கெட் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி பயிற்சி மையத்தின் புதிய 'டர்ப்' ஆடுகளம் மற்றும் மின்னொளி வசதியை தொடங்கி வைத்தார்.
பயிற்சி மைய நிர்வாகி முத்துக்குமரன் தலைமை தாங்கினார். பயிற்சியாளர் முரளி, ஆடிட்டர் பிரசாத், மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கணேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வருவாய்த்துறை அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வீட்டு மனைப்பட்டா வழங்கல்
திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் ஊராட்சி கொத்தனுார் கிராமத்தில் வருவாய்த் துறை சார்பில் நடந்த, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு, தாசில்தார் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அஸ்வினி சிவராஜ் வரவேற்றார். மணிகண்ணன் எம்.எல்.ஏ., 140 பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசினார்.
நாடகமேடை திறப்பு விழா
வானுார்: விழுப்புரம் தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதி 8 லட்சம் ரூபாயில் கொடூர் ஊராட்சியில் புதிதாக நாடக மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, பி.டி.ஓ., கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ரவிக்குமார் எம்.பி., நாடக மேடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் குகநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொடூர் ஊராட்சி தலைவர் கனகராஜ், தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், வானுார் ஒன்றிய வி.சி., செயலாளர் கலைமாறன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மகளிர் தின விழா
திண்டிவனம்: தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சிவா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நஸ்ரின், சிறப்பு இன்ஸ்பெக்டர் ராதா, வருவாய் ஆய்வாளர் டோமினிக் சேவியர், வி.ஏ.ஓ., ராம்குமார், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.

