/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலோர பகுதிகளில் கனமழை அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
/
கடலோர பகுதிகளில் கனமழை அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 01, 2024 04:29 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பை எதிர்கொள்ள, அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொளளப்பட்டது. அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி மற்றும் உயர் அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடலோரம் உள்ள மரக்காணம் மற்றும் வானுார் ஆகிய பகுதிகளில் மீனவ கிராமங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கிட, அரசுத் துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.
வருவாய் துறை சார்பில், வி.ஏ.ஓ.,க்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மரக்காணம் பகுதியில் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை, வனத்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று நேரில் ஆய்வு செய்தார். மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம், புயல்பாதுகாப்பு மையம் மற்றும் கோட்டக்குப்பம் கடலோர பகுதிகளை, அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டார்.
தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக், கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாநில உடல்உழைப்பு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.