/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புள்ளி விபரங்களுடன் பேசி அசத்தும் அமைச்சர்
/
புள்ளி விபரங்களுடன் பேசி அசத்தும் அமைச்சர்
ADDED : மார் 05, 2024 05:40 AM
திண்டிவனம்: பொதுக்கூட்டங்களில் அமைச்சர் மஸ்தான் புள்ளி விபரங்களுடன் பேசி கட்சியினர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தி.மு.க., கூட்டங்களில் அமைச்சர் மஸ்தான் துண்டு சீட்டு எழுதி அதை பார்த்து படிக்காமல், சரளமாக கட்சி விபரங்கள், அரசியல் பற்றி பேசும் பழக்கம் கொண்டவர்.
ஆனால், தற்போது புள்ளி விபரங்களை துண்டு சீட்டில் எழுதி பொதுக்கூட்டங்களில் குறிப்பாக பிரதமர் மோடியை 'டார்கெட்' செய்யும் வகையில் பேசி கட்சிக்காரர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
திண்டிவனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், 'இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி காட்டுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் உயர்த்திக்காட்டுவேன் என்று கூறினார். ஆனால் தற்போது 3 டிரில்லியன் டாலர் அளவிற்கு தான் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
அவர் ஆட்சிக்கு வரும் முன் 56 லட்சம் கோடி அரசின் கடன் சுமை இருந்தது.
தற்போது நிர்வாகத் திறமையின்மையால் 175 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. இந்தியாவின் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 4.7 சதவீதமாக இருந்தது.
மோடி ஆட்சியில் 8.7 சதவீதமாக உயர்ந்து விட்டது. இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் 3வது இடத்தில் இருந்தது. தற்போது 164வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மூலம் மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் 8.04 லட்சம் கோடி வழங்கியும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1.58 லட்சம் கோடி மட்டும் வழங்கியுள்ளது.
வரி வருவாயில் உத்தரப்பிரசேத்திற்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 5,000 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்துள்ளது' என புள்ளி விபரங்களை அடுக்கி பேசியது உடன்பிறப்புகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

