/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஆக 04, 2025 12:28 AM

வானுார்: வழுதாவூர் சாலை சந்திப்பில் இருந்து பெரம்பை செல்லும் பிரதான சாலை மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் இருந்து பெரம்பை வழியாக, வில்லியனுார் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த சாலை வழியாக பூத்துறை, காசிப்பாளையம், மணவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், வில்லியனுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
பூத்துறையில் இருந்து வழுதாவூர் சாலை சந்திப்பு வரை ஏற்கனவே முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வழுதாவூர் சாலை சந்திப்பு, அய்யங்குட்டிப்பாளையத்தில் இருந்து பெரம்பை வரையிலான ஒரு கிலோ மீட்டர் கொண்ட சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.
தற்போது சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. ஆங்காங்கே கருங்கற்கள் பெயர்ந்துள்ளன. இந்த சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 'இது தொடர்பாக அதிகாரிகளிடம், பல தடவை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விரைந்து சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.