/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலில் குளிப்பவர்கள் பலியாகும் மர்மம்: பொம்மையார்பாளையத்தில் நடப்பது என்ன?
/
கடலில் குளிப்பவர்கள் பலியாகும் மர்மம்: பொம்மையார்பாளையத்தில் நடப்பது என்ன?
கடலில் குளிப்பவர்கள் பலியாகும் மர்மம்: பொம்மையார்பாளையத்தில் நடப்பது என்ன?
கடலில் குளிப்பவர்கள் பலியாகும் மர்மம்: பொம்மையார்பாளையத்தில் நடப்பது என்ன?
ADDED : அக் 01, 2024 07:17 AM
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடலில் சுற்றுலா பயணிகள் சுழல் தெரியாமல் குளிப்பதால் பலியாகும் அவல நிலை தொடர்கிறது.
புதுச்சேரி கடற்கரையில் மணல் பகுதி இல்லாததாலும், குளித்து மகிழ முடியாததாலும், புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் தமிழக எல்லையான ஆரோவில் கடற்கரையியில் குளித்து மகிழ்ந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி கடற்கரையை அழகுபடுத்த கடலில் 5 மீட்டருக்கு மேல் கற்களைக் கொட்டி நிலமாக மாற்றினர். இதனால் கோட்டக்குப்பம் பகுதியில் கடல் நீர் கரையை நோக்கி வரத்தொடங்கியது. அதனை தடுக்க தந்திராயன்குப்பம் கடலில் துாண்டில்முள் வளைவு போடப்பட்டது.
இதனால், ஆரோவில் பகுதி கடற்கரையில் கடல் நீர் கரையை நோக்கி வந்ததால், அந்த பகுதியில் இருந்த மணல் மேடுகளில் கடல் நீர் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு இடம் பெயர்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் அந்த பகுதி கடற்கரையை ஆக்கிரமிப்பு செய்து புற்றீசலைப்போல் கடைகள் அதிகரித்துள்ளது.
பொம்மையார்பாளையம் கடலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கப்பல் உடைந்த நிலையில் அதன் உதிரிபாகம் கடற்கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் துாரத்தில் மூழ்கியது.
இதனால் அந்த பகுதியில் கடல் அலை சுழன்று செல்லும். மேலும் அதன் அருகே கடந்தாண்டு துாண்டில்முள் வளைவு போடப்பட்டதால், அந்த பகுதியில் திடீர் திடீரென சுழல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சுழல் இருப்பது குறித்து எந்த ஒரு எச்சரிக்கை தகவலையும் தெரிவிப்பதில்லை. மேலும், அங்கு கடைகள் வைத்திருப்பவர்களும், இது குறித்து சுற்றுலா பயணிகளிடம் கூறினால், வியாபாரம் பாதிக்கும் என்பதால் அவர்களும் எந்த ஒரு தகவலும் கூறுவதில்லை.
இதனால் பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுழல் தெரியாமல் குளிப்பதால், சுழலில் சிக்கி தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இதில் நீச்சல் தெரிந்தவர்களும் பல பேர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்வதுடன் பணியை முடித்து கொள்கின்றனர். மேலும் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தொடர்ந்து உயிர் பலி வாங்கும் பொம்மையார்பாளையம் கடலில் பொதுமக்கள் குளிப்பதற்கு அதிகாரிகள் நிரந்தர தடைவிதிக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்கானிப்பில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.