ADDED : செப் 02, 2026 07:23 PM
விழுப்புரம்: விழுப்புரம் பொய்யப்பாக்கத்தில், புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, லட்சுமணன் எம்.எல்.ஏ., சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற விழுப்புரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., லட்சுமணன், நேற்று நடந்த கேள்வி–பதில் நேரத்தின் போது, கோரிக்கை வைத்து பேசியதாவது:
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் தற்போதைய மின் தேவையை கருத்தில்கொண்டு, விழுப்புரம் நகரம் பொய்யப்பாக்கம் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, அங்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில், புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து பேசுகையில், ‘விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.,வின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இது குறித்து ஆய்வு செய்து, தேவைப்படின் அடுத்தாண்டு துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இரும்பை மற்றும் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால், விழுப்புரம் நகரில் அடுத்தாண்டு புதிய துணை மின் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தார்.
