/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
/
விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
விளை நிலங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
ADDED : டிச 30, 2025 05:11 AM

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே விவசாய நிலங்களில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாலமுருகன், குமாரசாமி தலைமையில் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில், செழிப்பான விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. அப்பகுதி விவசாய குடும்பங்கள் இந்த நிலங்களை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தற்போது, தமிழ்நாடு மின்வாரியம் இந்த விவசாய நிலங்களின் வழியாக, தனியார் நிறுவனத்திற்காக புதிய உயரழுத்த மின் கோபுரங்களை அமைத்து, மின்சார லைனை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை விவசாயிகள் தற்போது தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், அந்த நிலங்களில் தென்னை, கரும்பு, நெல், சவுக்கை போன்ற பயிர்களை பயிரிடுவதிலும், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். நிலத்தின் மதிப்பும் வெகுவாக குறையும். மின்சார லைன் அமைக்க கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவில்லை.
இத்திட்டத்தை அமல்படுத்தும் முன், நில உரிமையாளர்களிடம் எவ்வித ஆலோசனையோ அல்லது கருத்து கேட்கவோ இல்லை. இது தன்னிச்சையான நடவடிக்கையாக உள்ளது. உயரழுத்த மின் கம்பிகள் செல்வதால், விவசாய பணிகளின்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.
விவசாயிகள் உணர்வுகளையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு விளை நிலங்களின் வழியாக மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக மாற்றுப் பாதையிலோ அல்லது சாலையோரங்களிலோ மின்பாதையை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கருத்து கேட்காமல், தன்னிச்சையாக பணிகளை தொடங்கினால், அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, போராடுவதை தவிர எங்களுக்கு வழியில்லை.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

