/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார்: ரூ.25க்கு வாங்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை
/
விழுப்புரத்தில் பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார்: ரூ.25க்கு வாங்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை
விழுப்புரத்தில் பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார்: ரூ.25க்கு வாங்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை
விழுப்புரத்தில் பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார்: ரூ.25க்கு வாங்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை
ADDED : டிச 27, 2024 07:02 AM

விழுப்புரம்: பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இந்தாண்டு பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 30 சதவீதம் கரும்புகள் சேதமாகி, இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம், பேரங்கியூர், கரடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆண்டு தோறும் பன்னீர் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.
ஏப்ரல்-மே மாத காலங்களில் இந்த பன்னீர்கரும்பை, நடவு செய்து பயிரிடுகின்றனர். 10 மாத காலத்தில் நன்கு வளர்ந்த உடன், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கரும்பு அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
குறிப்பாக தை பொங்கல் பண்டிகை கொண்டாடும் தமிழக மக்கள், இந்த பன்னீர் கரும்பை வைத்து படையலிடுவதும், இனிப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதால் சுவைத்தும் மகிழ்கின்றனர்.
விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில், இந்தாண்டும் விவசாயிகள் பலர் 250 ஏக்கர் பரப்பில் பன்னீர் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது, 9 மாத பயிராக செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. தோகைகளை கழித்து, தற்போது கரும்பினை உள்ளூர் பகுதியில் சில்லரையில் விற்க தொடங்கியுள்ளனர். ஜனவரி மாதம் தொடக்கத்தில் அறுவடை தொடங்கும், இதே போல், தை பொங்கல் நாளின் நெருக்கத்தில் முழு அளவில் அறுவடை நடைபெறும்.
ஆனால், இந்தாண்டு சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயல் கனமழையில் பன்னீர் கரும்பு பயிர்கள் பாதித்து விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
கரும்பு விலையை ரூ.25 ஆக உயர்த்த கோரிக்கை:
இது குறித்து, பிடாகம் விவசாயிகள் அண்ணாதுரை, குமார் உள்ளிட்டோர் கூறியதாவது:
இந்தாண்டும் ஏராளமான விவசாயிகள் இந்த கருப்பு கரும்பை பயிரிட்டுள்ளனர். ஜனவரி தொடக்கத்தில் அறுவடை தொடங்க உள்ளது.
ஆனால், இம்மாத தொடக்கத்தில் பெய்த பெஞ்சல் புயல் கனமழையால் தென்பெண்ணை ஆற்றையொட்டிய இந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு, பன்னீர் கரும்புகள் சாய்ந்தும், விழுந்தும் சேதமடைந்துள்ளது. 30 சதவீதம் கரும் ஒடிந்தும், சாய்ந்தும் வீணாகிவிட்டது.
ஒரு ஏக்கர் பன்னீர் கரும்பு சாகுபடிக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. கரும்பு விதைக்கே ரூ.40 ஆயிரம் ஆகிறது. வளர்ந்த பிறகு 15 நாளிற்கு ஒருமுறை, தொடர்ச்சியாக சோலை கழிக்கவும், உரமும் இடவேண்டும். இதில் பராமரிப்பு செலவு அதிகம். இந்தாண்டு புயல் மழையால் சாய்ந்த கரும்பினை ஆட்கள் வைத்து நிமிர்த்தியும், மண் அணைப்பதும் என கூடுதலாக ரூ.30 ஆயிரம் செலவாகியுள்ளது.
அரசு தரப்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ.21க்கு வாங்கினர்.
இந்தாண்டும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என கூறியுள்ளனர்.
இந்தாண்டு கூடுதல் இழப்பு காரணமாக, ஒரு கரும்புக்கு ரூ.23 முதல் ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், விவசாயிகளுக்கான இழப்பீடை ஓரளவிற்கு ஈடுகட்ட முடியும் என்றனர்.