/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் அவதி: அரசு மருத்துவக் கல்லுாரியில் அவலம்
/
அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் அவதி: அரசு மருத்துவக் கல்லுாரியில் அவலம்
அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் அவதி: அரசு மருத்துவக் கல்லுாரியில் அவலம்
அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் அவதி: அரசு மருத்துவக் கல்லுாரியில் அவலம்
ADDED : ஏப் 18, 2025 04:36 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. 616 படுக்கை வசதிகளுடன் துவக்கப்பட்ட இம்மருத்துவமனையில் 2010ம் ஆண்டில் அதற்கேற்ற மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப் பட்டனர். தற்போது மருத்துவமனை விரிவடைந்து, 1,274 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது.
தினசரி விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தினமும் 4,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். 900க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல் சிகிச்சை, சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை, மற்ற மாவட்டங்களில் இருந்தும் மிகவும் சிக்கலான பிரசவ கேஸ்களும் இங்கு வருகின்றன. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மருத்துவமனை துவக்கப்பட்டபோது வார்டுகளில் ஏற்படுத்தப்பட்ட கழிவறைகளை தவிர தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்ப கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. கழிவறைகளில் இந்தியன் டாய்லட் வசதி மட்டுமே உள்ளதால், வயதான நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். கழிவறைகளில் சுத்தமின்றி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
அதே போன்று தரமற்ற பிளாஸ்டிக் குழாய்களை பொருத்தியுள்ளதால், எந்த நேரமும் தண்ணீர் கசிந்து பாசி பிடிக்கும் நிலை உள்ளது. மருத்துவமனைகளில் உள்ள கழிவு நீர் வாய்கால் கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பழைய நிலையிலேயே உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. மருத்துவமனையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவி வரும் கோடை வெயிலால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு அதிக அளவில் குடி நீர் தேவைப்படுகிறது. மருத்துவமனையில் தற்போது 500 லிட்டர் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டும், அது போதுமானதாக இல்லை. எனவே குடிநீர் வசதியை மேம்படுத்தும் வகையில் கூடுதல் குடிநீர் தொட்டிகளை அமைத்து அதிலிருந்து தண்ணீரை சுத்தகரிப்பு செய்து வழங்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மருத்துவமனையில் குடிநீர் வசதி, கழிவு நீர் வாய்க்கால், கூடுதல் கழிவறை மற்றும் வெஸ்டன் டாய்லட் வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.