ADDED : மே 13, 2025 01:01 AM
செஞ்சி : அப்பம்பட்டில் விற்பனை செய்யப்படும் வேர்க்கடலை விதைகளை மாவட்டம் முழுதும் இருந்து இறைவை சாகுபடிக்காக விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்த படியாக வேர்க்கடலை சாகுபடி செய்கின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 1.97 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்ளில் இறைவை சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சாகுபடி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் பல ஆண்டுகளாக வேர்க்கடலை விதை தயாரிப்பில் ஏராளமான வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்தும், மகாராஷ்டிராவில் இருந்தும் வேர்க்கடலை பயிர்களை வாங்குகின்றனர். உடைந்த பயிர்கள், சொத்தை, முளைப்பு திறன் குறைந்த சிறிய பயிர்களை தனியாக பிரித்து, விதைக்கு ஏற்ற முழு பயிர்களை தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இங்கு வேர்க்கடலை விதைகள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். விதை வேர்க்கடலையில் இருந்து இருந்து பிரிக்கப்படும் மீதம் உள்ள பயிர்களை எண்ணை தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டம் முழுதும் இறைவை வேர்க்கடலை சாகுபடி தற்போது நடந்து வருவதால் அப்பம்பட்டில் விதை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.