தொடரும் போக்குவரத்து நெரிசலால் ... மக்கள் அவதி: விதிமீறலால் விழுப்புரத்தில் போலீசார் திணறல்
தொடரும் போக்குவரத்து நெரிசலால் ... மக்கள் அவதி: விதிமீறலால் விழுப்புரத்தில் போலீசார் திணறல்
ADDED : ஜூலை 02, 2026 02:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தங்கள், போக்குவரத்து விதிமீறல்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் நகரில் நாளுக்கு, நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. விழுப்புரம் மாவட்டம், கடந்த 1993ம் ஆண்டு புதிதாக உருவாகி, தற்போதும் மாவட்ட தலைநகரமான விழுப்புரம் மாநகரம், போதிய அளவு விரிவாக்கம் பெறாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் கிழக்கு பாண்டி ரோடு, தினந்தோறும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்த சாலையில் நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரை சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் மேற்கொண்டும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த சாலை மட்டுமின்றி, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளான நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு, புதிய பஸ் நிலையம் எதிரே, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகவே உள்ளது. இந்த நெரிசலை கட்டுப்படுத்துவதில் டிராபிக் போலீசாரே பள்ளி, அலுவலக நேரங்களில் திணறி வருகின்றனர்.
மேலும், மகாராஜபுரத்தில் இருந்து நான்கு முனை சிக்னல் வரையில் இந்த சாலையில் கட்சிகளின் ஊர்வலம் , முக்கிய பிரமுகர்கள் வருகை, பண்டிகை காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் என இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும், 5 கி.மீ., துாரம் கடக்க அரை மணி நேரத்திற்கும் மேலாகிறது.
இதனால், புதிய பஸ் நிலையம், மார்க்கெட், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வர மக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விழுப்புரம் நகரில் ரிங் ரோடு அமைப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.
விழுப்புரம் நகரில் அதிகரித்து கொண்டே செல்லும் வாகன போக்குவரத்து பிரச்னையை சரிசெய்ய அதிகாரிகள் துரிதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி செல்வதாலும், மாணவர்கள், பணிக்கு செல்வோர் அவசரம் கருதி செல்வதாலும் விழுப்புரம் நகரில் நடக்கும் சிறு, சிறு விபத்துகளும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்த போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியிலாவது, விழுப்புரம் நகரில் தீர்க்கப்படாத பிரச்னையாகவுள்ள டிராபிக் பிரச்னைக்கு அதிகாரிகள் துரிதமான தீர்வை காண வேண்டும்.
